தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் 5 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்

கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் பெய்து வரும் தொடர் மழையால் தமிழகத்தில் இருந்து செல்லும் 5 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.


கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் பெய்து வரும் தொடர் மழையால் தமிழகத்தில் இருந்து செல்லும் 5 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களுக்கு ஜவ்வரிசி, ஜவுளி ரகங்கள், கம்பிகள் உள்ளிட்ட சரக்குகள் 5 ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, புணே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல், தமிழகத்தில் இருந்து செல்லும் முக்கிய வழித்தடமான கர்நாடக மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததோடு, மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளன. 
இதன்காரணமாக தமிழகத்தில் இருந்து கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கிளம்பிய சரக்கு லாரிகள் இன்னும் சென்றடையவில்லை.
மைசூரு-மங்களூரு, சிக்மகளூரு-தர்மசாலா, எல்லாபூர்-அங்கோலா, பெலகாவி-போன்டா, சார்சி-கும்டா, மிர்ஜன்-அங்கோலா, ஜம்கண்டி-விஜயபூர், கஜ்வாட்-மீரஜ்  உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 
இந்தநிலையில், கேரளம் மற்றும் கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்குச் செல்லும் 5 ஆயிரம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்னகேசவன் கூறுகையில், மகாராஷ்டிரத்தில் பெய்யும் கனமழையால், சரக்கு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளம் மற்றும் வட மாநிலங்களுக்குச் செல்லும் 5 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 10 சதவீத லாரிகள் மட்டும் ஆந்திரம் வழியே செல்கின்றன. மழைநீர் தேங்கியுள்ள சாலைகளில் லாரிகளை இயக்க வேண்டாம் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில லாரிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளன. அதனை மீட்கும் பணிகளையும் மேற்கொண்டுள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com