சுடச்சுட

  

  மக்காச்சோளப் பயிரை தாக்கும் படைப்புழு மேலாண்மை குறித்த விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் உழவர் விழா அம்மம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   அரசு வேளாண் துறை, சேலம் மாவட்டம் மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து மக்காச்சோளப் பயிரை தாக்கும் படைப்புழு மேலாண்மை குறித்த விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் ஜல்சக்தி அபியான் உழவர் விழா சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் நடைபெற்றது. சேலம் திட்ட இயக்குநர் (அட்மா) வேளாண் இணை இயக்குநர் க.கமலா அனைவரையும் வரவேற்று பேசினார்.
   இதில் ஆட்சியர் பேசும்போது, தமிழக முதல்வர் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல நலத் திட்டங்களை செய்து வருகிறார். மானாவரி திட்டம், கூட்டுப்பண்ணைத் திட்டம் ஆகியவற்றை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
   மேலும், வரும் பருவ மழையானது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க நாம் பாடுபடவேண்டும். குறிப்பாக மழை நீரானது நிலத்தில் 3 செ.மீ. அளவு வரை மட்டுமே தேக்கிக் கொள்ளும். ஆகையால் விவசாயிகள் அனைவரும் நிலத்தில் குட்டை அமைத்து மழை நீரை சேமிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் நலத் திட்டங்களை வழங்கினார்.
   விழாவில் ராசி விதைகளின் நிறுவனர் வேளாண் செம்மல் மு.இராமசாமி சிறப்புரை ஆற்றினார். ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் எஸ்.ஆர்.வெங்கடாஜலம், வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஸ்ரீராம், இணைப் பேராசிரியர் பி.கீதா, எம்.விஜயகுமார், வேளாண் துணை இயக்குநர் ஆர்.செல்லதுரை, ர.பன்னீர்செல்வம், மத்திய திட்டவேளாண் துணை இயக்குநர் எஸ்.சிங்காரம், (விதை ஆய்வு) துணை இயக்குநர் ஏ.நாசர், (தரக் கட்டுப்பாடு) உதவி இயக்குநர் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வேளாண் உதவி இயக்குநர் எஸ்.வெங்கடேசன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai