நெடுஞ்சாலையில் மூடிக் கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை 

தேசிய நெடுஞ்சாலையில் மூடிக் கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் மூடிக் கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தீவட்டிப்பட்டி கிராம ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காகவும், சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் சுமார் ரூ.15 லட்சத்தில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனியாக கழிப்பறைகள் கட்டப்பட்டன. மேலும், உள்ளூர் மக்கள் அங்கே துணிகள் துவைக்கவும், உலர்த்தவும் தேவையான வசதிகள், தண்ணீர் தொட்டிகள் போன்றவையும் அமைக்கப்பட்டன.
 இந்த நிலையில் இந்த சுகாதார வளாகம் திறக்கப்பட்டு ஒரு வாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில்,தொடர்ந்து பூட்டியே கிடக்கிறது. மேலும், ஆழ்துளைக் குழாய் கிணற்றில் இருந்த மின் மோட்டார் பழுது என எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால், சுகாதார வளாகத்துக்கு தண்ணீர் வசதி இன்றி உள்ளது. மேலும், கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டதில் இருந்து தற்போது வரை பூட்டியே கிடக்கிறது. மேலும், சுகாதார வளாகத்துக்குள் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக் காணப்படுகிறது.
 இதனால், தீவட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் இயற்கை உபாதைக்காக திறந்தவெளியையே பயன்படுத்தி வருகின்றனர். எனவே, உடனடியாக இங்குள்ள சுகாதார வளாகத்தை சீர்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து ஒன்றிய அலுவலர்களிடம் கேட்ட போது, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று சிறப்பு நிதி பெற்று சுகாதார வளாகம் சீரமைக்கப்படும் என்று கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com