மேட்டூர் அணை 86-ஆவது ஆண்டாக திறப்பு: ஓரிரு நாளில் 120 அடியை எட்ட வாய்ப்பு

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து 86-ஆவது ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து 86-ஆவது ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழும் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும்.
 அணையில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொருத்தும், அணைக்கான நீர்வரத்தைப் பொருத்தும் அணை திறக்கப்படும் நாள் வேறுபடும். இந்த காலக்கட்டத்தில் 320 டி.எம்.சி. தண்ணீரைப் பயன்படுத்தி சுமார் 16.50 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் பயிர்கள் விளைவிக்கப்படும்.
 ஆனால், கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், குறிப்பிட்ட காலத்தில் அணை திறக்கப்படவில்லை. நடப்பாண்டிலும் போதிய நீர் இருப்பு இல்லாததால், உரிய தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
 கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை காலை முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
 மேட்டூர் அணையில் இருந்து 86-ஆவது ஆண்டாக, டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஜன. 28-ஆம் தேதி வரை அணை திறக்கப்படும்.
 மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அணையின் மேல்மட்ட மதகுகளை இயக்கி, டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவிட்டார். காவிரி அன்னையைப் போற்றும் வகையில், ஆற்றில் மலர்களையும் அவர் தூவி வணங்கினார்.
 நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள், அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 முதல்கட்டமாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த அளவு படிப்படியாக 10 ஆயிரம் கன அடி வரை டெல்டா பாசனத்தின் தேவையைப் பொருத்து, திறந்து விடப்படும். இந்த தண்ணீர் கல்லணையை அடுத்த மூன்று நாள்களில் சென்றடையும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், டெல்டா விவசாயிகள் மட்டுமன்றி, காவிரி கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த 11 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை உரிய தேதியான ஜூன் 12-ஆம் தேதியன்று 15 முறையும், அதற்கு முன்னதாக 11 முறையும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
 மேட்டூர் அணை கடந்த 4 நாள்களில் மட்டும் 44 அடி உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை: ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சி.வையாபுரி மற்றும் ஜெயராமன் ஆகியோர் கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவை 50 ஆயிரம் கன அடியாக அதிரிக்க வேண்டும். தற்போது காய்ந்துக் கிடக்கும் ஆறு நனைய வாய்ப்புள்ளது.
 கான்கிரீட் கால்வாய் அமைப்பதால் மண்ணில் ஈரப்பதம் குறைந்து, நிலத்தடி நீர் உயருவது தடுக்கப்படும். எனவே, மண் கால்வாய்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். கடைமடை வரை தண்ணீர் செல்ல கூடுதலாக தண்ணீரைத் திறக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com