சுடச்சுட

  

  காவிரிக் கரையோர கிராம மக்கள், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: ஆட்சியர் எச்சரிக்கை

  By DIN  |   Published on : 15th August 2019 10:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்.
   மேட்டூர் அணையிலிருந்து ஆக.13 முதல் டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அது சமயம், காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் எவரும் உரிய பாதுகாப்பின்றி காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன்பிடித்தல் போன்ற செயல்களிலோ ஈடுபடவேண்டாம்.
   அபாயகரமான பகுதிகளில் நின்று செல்லிடப்பேசியில் சுயபடம் எடுக்கக்கூடாது. குழந்தைகள் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில், இறங்கிடாத வகையில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
   நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொது மக்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும். மேலும், காவிரி கரையோரக் கிராமங்களில் வெள்ள நீரால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை எனக் கண்டறியப்பட்ட இடங்களில் மாவட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
   எனவே, ஆற்றின் கரையோரக் கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் பாதுகாப்பான இடங்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
   மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 0427-1077, காவல்துறைக் கட்டுப்பாட்டு எண்-100, தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு எண்- 101, மருத்துவ உதவி - 104, அவசர கால ஆம்புலன்ஸ்- 108, மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர், மேட்டூர் 94450 - 00435, வட்டாட்சியர், மேட்டூர் -94450 - 00552, வருவாய் கோட்டாட்சியர், சங்ககிரி - 94450 - 00436. வட்டாட்சியர், எடப்பாடி- 94450 - 00556. வட்டாட்சியர், சங்ககிரி-94450 - 00554 என்ற எண்களில் அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai