சேலம் மாவட்டத்தில் விடிய விடிய மழை: 251 மி.மீட்டர் மழை பதிவு

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெவ்வேறு இடங்களில் விடிய விடிய இடி மின்னலுடன்கூடிய கன மழை பெய்தது. கன மழையால் வயல்கள் நீரில் மூழ்கின.

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெவ்வேறு இடங்களில் விடிய விடிய இடி மின்னலுடன்கூடிய கன மழை பெய்தது. கன மழையால் வயல்கள் நீரில் மூழ்கின. புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 251 மி.மீ. மழைப் பதிவாகியது.
 சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மாலை, இரவு நேரங்களில் மழைப் பெய்து வருகிறது. இந் நிலையில் செவ்வாய்க்கிழமை இரவும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
 மேட்டூர், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. மேலும் எடப்பாடி அருகே உள்ள கல்லபாளையம், வெள்ளரிவெள்ளி, புதுப்பட்டி, பூமணியூர், கோனேரிப்பட்டி, குள்ளம்பட்டி, பூலாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்ததால் விலைநிலங்களில் மழைநீர் புகுந்து நிலக்கடலை, வாழை உள்ளிட்டவைகள் நீரில் மூழ்கின. இந்த மழையால் எடப்பாடியில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்து விட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 இதனால், கந்தம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் சாலையில் மழைநீர்த் தேங்கி நின்றது.
 இதைத் தொடர்ந்து புதன்கிழமை மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப் பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
 மேட்டூர்.74.4, எடப்பாடி-72.2, ஓமலூர்-41, சங்ககிரி-33.1, சேலம்-9.6, காடையாம்பட்டி-9.2, ஏற்காடு-7.8, ஆணைமடவு-3, தம்மம்பட்டி-1.4 என மாவட்டத்தில் மொத்தமாக 251.7 மி.மீ. மழைப் பதிவாகி உள்ளது.
 சங்ககிரியில்...
 சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் மழை பெய்தது.
 புதன்கிழமை விடியற்காலை மூன்று மணி நேரம் தொடர்ந்து 33.1 மில்லி மீட்டர் மழைப் பெய்தது. இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
 சங்ககிரி, வடுகப்பட்டி, தேவூர், குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி ஆகிய பகுதியில் மழைநீர் விவசாய விளை நிலங்களில் தேங்கி நின்றன.
 எடப்பாடியில்..
 எடப்பாடி, பூலாம்பட்டி, மொரசப்பட்டி, வெள்ளரிவெள்ளி, சித்தூர், எடப்பாடி நகர்புறப் பகுதியில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலையே நிலவி வந்தது.
 இந் நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு எடப்பாடி சுற்றுப்புறப்பகுதியில் திடீரென கனமழை கொட்டியது.
 இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த கன மழையால், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாயப்பயிர்கள் சேதமடைந்தன. நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. வெள்ளரிவெள்ளி பகுதியில் பல்வேறு இடங்களில் வயல்வெளிகளில் மழைநீர்த் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.
 குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க அறிவுரை...
 கன மழையால் கலங்கலாக வரும் குடிநீரை காய்ச்சி வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சேலம்-நாமக்கல் வட்டம் மேற்பார்வை பொறியாளர் (பொ) என். குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 காவிரி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
 சேலம் மாவட்டத்தில் 11 கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலமாக 2 நகராட்சிகள், 31 பேரூராட்சிகள் மற்றும் 19 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 5,071 குடியிருப்புகளுக்கு நாளொன்றுக்கு 185.96 மில்லியன் லிட்டர் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 12 கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலமாக 3 நகராட்சிகள், 13 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 2,214 குடியிருப்புகளுக்கு நாளொன்றுக்கு 60. 71 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
 தற்போது கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் கலங்கல் தன்மை சற்று கூடுதலாக வருகிறது.
 இருந்தும் மேற்படி நீரை பல்வேறு கட்டங்களில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
 கூட்டு குடிநீர் திட்டங்களில் அனைத்துப் பகுதிகளுக்கும் குளோரின் கலக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
 எனவே நீரில் உள்ள கலங்கலைப்பார்த்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பொதுமக்கள் குடிப்பதற்கு குடிநீரை காய்ச்சி, வடிகட்டிய பின் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com