பெண்கள் கல்வி மூலம் சிக்கல்களை நேர்மையோடு எதிர்கொண்டு தீர்வு காண வேண்டும்: எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் சுதா சேஷய்யன்

பெண்கள் கல்வி மூலம் சிக்கல்களை நேர்மையோடு எதிர்கொண்டு தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் சுதா சேஷய்யன் பேசினார்.

பெண்கள் கல்வி மூலம் சிக்கல்களை நேர்மையோடு எதிர்கொண்டு தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் சுதா சேஷய்யன் பேசினார்.
 சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரம நூற்றாண்டு விழாவையொட்டி மகளிர் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இதில் விவேகானந்தர் எதிர்பார்த்த பெண்மை என்ற தலைப்பில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் சுதா சேஷய்யன் பேசியது:
 நமது முன்னோர்கள் தங்களது வாழ்க்கையில் அனுபவித்து திரட்டி வைத்திருந்த விஷயங்களை நாம் இன்றைக்கு வளர்க்கிறோம். நமது கல்வி முன்னோர் வாழ்ந்த பெருமையை உணர்த்த வேண்டும்.
 பெண்கள் நேர்மை, நியாயத்துடன் இருக்க வேண்டும். என்னவாக இருந்தாலும் நேர்மையுடன் இருக்க வேண்டும். நாம் தவறு செய்திருந்தாலும், அதை நேர்மையுடன் ஒப்புக்கொள்ளும் மனநிலை வேண்டும். பெண்கள் இயல்பாகவே நேர்மையான குணம் கொண்டவர்கள். அந்த நேர்மையை எப்போதும் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையில் பிரச்னை வந்தால் உடைந்து போய்விடுகிறார்கள். கருத்தைச் சொல்ல தயங்காமல் இருக்க வேண்டும்.பெண்கள் மென்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையில் சிக்கல், பிரச்னை வராமல் இருக்காது. சிக்கல்களைத் தாண்டி திரும்பி வந்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது. வாழ்க்கையில் பிரச்னை, சிக்கல்களை எதிர்கொள்கிற மன உறுதி வேண்டும். எந்த பிரச்னையானாலும் தீர்க்க முடியாதது எதுவும் இல்லை. அமைதியாக இருந்து ஆழ்ந்து சிந்தித்தால் தீர்வு கிடைக்கும். அதில் வெற்றியும் பெற முடியும்.
 ஒரு பெண்ணால் சாதிக்க முடிகிறது என்றால், இன்னொரு பெண்ணாலும் சாதிக்க முடியும். மனிதநேயத்துடன் இருக்க வேண்டும். அன்பு காட்ட கூடியவர்களாக இருக்க வேண்டும். மனதை செழுமைப்படுத்தி மூத்தவர்களை மதிக்கும் பண்பு வேண்டும். நன்மையைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி மூலம் சிக்கல்களை நேர்மையோடு எதிர்கொள்ள வேண்டும். மனிதநேயமிக்கவர்களாக வாழ வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில் கேரளம் ஹரிபாத் ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி வீரபத்ரானந்தா, சேலம் ராமகிருஷ்ண மட செயலாளர் சுவாமி யதாத்மானந்தா, நரசூஸ் காபி நிறுவன தலைவர் பி.சிவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com