முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்

ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் வைரஸ் காய்ச்சல்  பரவி வருவதால்,  காய்ச்சலின் வேகம் அதிகரிக்கும் முன்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் வைரஸ் காய்ச்சல்  பரவி வருவதால்,  காய்ச்சலின் வேகம் அதிகரிக்கும் முன்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஓமலூர்,  காடையாம்பட்டி  வட்டங்களில் கடந்தாண்டு முதலில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது.  இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவியது.  இதையடுத்து சென்னையிலிருந்து சுகாதாரப் பணிகள் மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினர் சேலத்தில் மூன்று மாதங்கள் முகாமிட்டு வைரஸ் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில்,  ஓமலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தற்போது சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், பொது இடங்கள்,  சாக்கடை அடைப்புகளில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றன.  மற்றொரு புறம்,  குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுவதால்,  மக்கள்  தங்கள் வீடுகளில்,  தண்ணீரை  நீண்ட நாள்களாக சேமித்து வைக்க தொடங்கியுள்ளனர்.  இதனால்,  ஓமலூர், ஆர்.சி. செட்டிப்பட்டி,  காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஆர்.சி.செட்டிப்பட்டி  உதய் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளர். ஓமலூர் நகைக்கடை தெருவைச் சேர்ந்த 55  வயது முதியவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  காமலாபுரத்தில் 7 வயது சிறுமி காய்ச்சலால்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.  ஆங்காங்கே  மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனால், வைரஸ் காய்ச்சல்  பாதிப்பு அதிகரிக்கும் முன்பாக அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து  ஓமலூர் மருத்துவ அலுவலர் அருண்குமார்  கூறும்போது,  காமலாபுரம்  உதய் நகர், மோட்டூர், ஓம்சக்தி நகர் பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு, புகை மருந்து அடித்தல் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, மேட்டூருக்கு புதிய தண்ணீர் வருவதால்,  முறையாக குளோரினேஷன் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.  அத்துடன், கொசு  ஒழிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.
ஓமலூர்  வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் கூறும் போது, ஓமலூரில் 30 பேர் கொண்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். 
மேலும், வாகனங்கள் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டு, குளோரின் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com