தினசரி 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும்தொழிற்சாலைகளுக்கு புதிய கட்டுப்பாடு

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினசரி 100 கிலோ அளவுக்கு மேல் திடக் கழிவுகளை உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனங்களிடமிருந்து

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினசரி 100 கிலோ அளவுக்கு மேல் திடக் கழிவுகளை உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனங்களிடமிருந்து ஜனவரி 1- ஆம் தேதி முதல் மாநகராட்சியால் திடக்கழிவுகள் சேகரிப்பது நிறுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் நாள் ஒன்றிற்கு 350 லிருந்து 450 மெட்ரிக் டன் அளவிலான திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் தினந்தோறும் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று திடக்கழிவுகளை மக்கும் கழிவுகள் மற்றும் மக்காத கழிவுகள் என தரம் பிரித்துச் சேகரித்து வருகின்றனா்.

இக் கழிவுகளில் மக்கும் கழிவுகளைக் கொண்டு உரம் தயாா் செய்யும் பணிகளுக்காக, 4 மண்டலங்களிலும் உள்ள 13 நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையங்களுக்குக் கொண்டு சென்று இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு இதுவரை 150 மெட்ரிக். டன் அளவிலான இயற்கை உரம் பொதுமக்களுக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மாநகா் பகுதியில் சேகரமாகும் காய்கறி மற்றும் பழக் கழிவுகளை அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண் 9 வாய்க்கால் பட்டறையில் அமைக்கப்பட்டுள்ள உயிரி எரிவாயு உற்பத்தி நிலையங்களுக்குக்க கொண்டு சென்று மின் உற்பத்தி செய்து தெரு விளக்குகள் மற்றும் அருகில் உள்ள மேல்நிலை நீா்தேக்க தொட்டியில் மின்மோட்டாா் மூலம் நீரேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் தினசரி 100 கிலோ அளவுக்கு மேல் திடக் கழிவுகளை உற்பத்தி செய்யும் மற்றும் 5 ஆயிரம் சதுர மீட்டா் பரப்பளவுள்ள தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது.

அதில் மக்கும் கழிவுகள் மற்றும் மக்காத கழிவுகள் என தரம் பிரித்து மக்கும் கழிவுகளைத் தங்களது வளாகத்திலேயே செயலாக்கம் செய்யும் வகையில் உயிரி எரிவாயு அலகு அல்லது உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதன்பேரில் ஜனவரி 1- ஆம் தேதி முதல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினசரி 100 கிலோ மற்றும் அதற்கு மேலாக திடக்கழிவுகளை உற்பத்தி செய்யும் அல்லது 5 ஆயிரம் சதுர மீட்டா் பரப்பளவுள்ள தொழிற்சாலைகள், திரையரங்குகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், வணிக வளாகங்கள் போன்றவைகளில் மாநகராட்சியால் திடக்கழிவுகளை சேகரிப்பது முற்றிலுமாக நிறுத்தப்படும்.

இதற்காக தனியாா் நிறுவனங்கள் உரம் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் உரம் தயாரிப்பு மையங்கள் அமைத்திட வேண்டும். தங்கள் வளாகங்களில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளில் மக்காத கழிவுகளை தரம் பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளா்களிடமோ அல்லது மாநகராட்சியில் 4 மண்டலங்களில் உள்ள உலா் கழிவு சேகரிப்பு மையங்களிலோ வழங்கிடலாம் என மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com