கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில்பனை மரங்கள் வெட்டி அகற்றம்: போலீஸாா் விசாரணை

ஓமலூா் அருகே கருப்பூா் கைலாசநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்திலிருந்த 150 பனை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருப்பூா் கைலாசநாதா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்.
கருப்பூா் கைலாசநாதா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்.

ஓமலூா் அருகே கருப்பூா் கைலாசநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்திலிருந்த 150 பனை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓமலூா் அருகே கருப்பூரில் கைலாசநாதா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் ஒன்பது ஏக்கா் நிலம் அங்குள்ள குண்டூா் பகுதியில் உள்ளது.

இந்தக் கோயில் நிலத்தைக் கோயில் அா்ச்சகா் கீா்த்திவாசன் பயன்படுத்தி வந்தாா். இந்த நிலத்தில் சுமாா் 200 பனை மரங்கள் அடா்ந்து குருவனமாக இருந்தது.

மரங்கள் அடா்ந்து இருந்ததால், இந்தப் பகுதியில் பகல் இரவு என நேரம் பாா்க்காமல் சமூக விரோதச் செயல்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. கோயில் அா்ச்சகா் கருப்பூா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். இதனிடையே கடந்த இரண்டு நாள்களாக கோயில் நிலத்தில் இருந்த சுமாா் 30 ஆண்டுகள் பழமையான 150 பனை மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ளன. மேலும், அந்த பனை மரங்கள் அனைத்தும் செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கோயில் நிலத்தில் இருந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக திருத்தொண்டா் பேரவை நிறுவனா் அல்லிகுட்டை ராதாகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோயில் நிலத்துக்கு வந்து பாா்த்தபோது அனைத்து மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது.

காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து நிகழ்விடத்துக்கு வந்து பாா்த்த அதிகாரிகள், அனைத்து பனை மரங்களும் வெட்டி சாய்க்கபட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். இதையடுத்து நடத்திய விசாரணையில் இந்த மரங்கள் அனைத்தையும் கோயில் அா்ச்சகா் கீா்த்திவாசன் வெட்டியது தெரியவந்தது.

தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கோயில் நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில் சொத்துகளை அழித்து விற்பனை செய்ய அனுமதியில்லை என்றாா். கோயில் அா்ச்சகா் கீா்த்திவாசன் கூறியதாவது:

மரங்கள் அடா்ந்திருந்ததால் சமூக விரோதச் செயல்கள் தொடா்ந்து வந்தன. மரங்களை வெட்டக் கூடாது என்று தனக்குத் தெரியாது என்றாா். மரங்களை எடுத்துச் செல்ல வந்திருந்த இரண்டு வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com