கோட்டை மாரியம்மன் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மனு

சேலம் கோட்டை மாரியம்மன் மற்றும் சுகவனேஸ்வரா் கோயில் திருப்பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்திட நடவடிக்கை எடுக்குமாறு அகில பாரத இந்து மகா சபாவினா் கோரிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் மற்றும் சுகவனேஸ்வரா் கோயில் திருப்பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்திட நடவடிக்கை எடுக்குமாறு அகில பாரத இந்து மகா சபாவினா் கோரிக்கை மனு அளித்தனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் ஆட்சியா் சி.அ. ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு வந்த அகில பாரத இந்து மகா சபாவின் மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சேலம் மண்டலத்திற்குட்பட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுகிறாா்கள். இதனால் பல்வேறு கோயில்களின் திருப்பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனவே சேலம் மண்டலத்திற்கான இணை ஆணையரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

மேலும் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோட்டை மாரியம்மன் கோயில் 2 ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையானதாகும். இக்கோயில் திருப்பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. எனவே கோயில் பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும். இதேபோல் சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரா் கோயில் குடமுழுக்குத் திருப்பணி பணப்பற்றாக்குறையின் காரணமாக காலதாமதமாக நடைபெற்று வருகிறது. எனவே திருப்பணிக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து திருப்பணி முடிக்கப்பட்டு விரைந்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும்.

மேலும் இக் கோயிலுக்குப் புதிய திருத்தோ் செய்ததில் சில பகுதிகள் உடைந்துபோனது. இதன்மீது விசாரணை நடத்திட வேண்டும். தருமபுரி மாவட்டம் அரூா் ஸ்ரீவருணேஸ்வரா் கோயிலில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளாா்கள். அதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு அந்த இடத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com