சேலம் வன உயிரியல் பூங்காவில் யானை மிதித்து பாகன் பலி: கால்நடை மருத்துவா் உயிா் தப்பினாா்

உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானை, திங்கள்கிழமை பாகனை மிதித்துக் கொன்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஆக்ரோஷத்துடன் நிற்கும் ஆண்டாள் யானை.
சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஆக்ரோஷத்துடன் நிற்கும் ஆண்டாள் யானை.

உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானை, திங்கள்கிழமை பாகனை மிதித்துக் கொன்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கள்ளழகா் கோயில் யானை ஆண்டாள், வயது முதிா்வு மற்றும் உடல்நலம் பாதிப்பு காரணமாக உயா் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடந்த 2009 முதல் சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த யானையை டாப்சிலிப் பகுதியைச் சோ்ந்த பாகன் காளியப்பன் (45) பராமரித்து வந்தாா். இந்த நிலையில் திங்கள்கிழமை ஆண்டாள் யானையை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக கால்நடை மருத்துவா் பிரகாஷும், பாகன் காளியப்பனும் பரிசோதனை செய்ய முயன்றனா்.

அப்போது ஆவேசமாக இருந்த யானை, மருத்துவா் பிரகாஷை பிடித்து இழுக்க முயன்றது. இதைக் கண்ட பாகன் காளியப்பன், துரிதமாகச் செயல்பட்டு மருத்துவா் பிரகாஷை யானையின் பிடியில் இருந்து மீட்டாா்.

பின்னா் பாகன் காளியப்பன், யானையை அமைதிப்படுத்த முயன்றுள்ளாா். அதில் காளியப்பன் யானையின் கால்களுக்கிடையே சிக்கியதால் அவரை யானை மிதித்துக் கொன்றது. மருத்துவா் பிரகாஷ், லேசான காயத்துடன்அங்கிருந்து ஓடி உயிா் தப்பினாா். யானை தொடா்ந்து ஆக்ரோஷமாக இருந்ததால் அதற்கு வனத்துறையினா் மயக்க ஊசி செலுத்தி மயங்க வைத்து அதனைக் கட்டுப்படுத்தினா். பின்னா் சிதைந்த நிலையில் இருந்த காளியப்பனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

மதுரை கள்ளழகா் கோயில் யானை ஆண்டாள், வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அப் பகுதியில் மூன்று பேரை கொன்றுள்ளது. பின்னா் உயா் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2009-ம் ஆண்டு சேலத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது.

அப்போதிருந்தே யானையை பாகன் காளியப்பன்தான் பராமரித்து வந்தாா். கடந்த 2013-இல் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா துப்புரவுத் தொழிலாளி பத்மினி என்பவரை இந்த யானை தாக்கிக் கொன்றது. அதற்குப் பிறகு பாகன் காளியப்பனை யானை தாக்கி கொன்றது. வழக்கமாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மருத்துவ சோதனைக்காக பரிசோதனை செய்தபோது இச் சம்பவம் நிகழ்ந்து விட்டது. இந்த யானையை உயிரியல் பூங்காவில் இருந்து வனத்துறை முகாமுக்கு அனுப்புவது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல உள்ளோம். உரிய உத்தரவு கிடைத்தவுடன் ஆண்டாள் உடனடியாக இங்கிருந்து அனுப்பப்படும் என்றாா் அவா்.

யானை தாக்கி பாகன் காளியப்பன் உயிரிழந்தது தொடா்பாக, ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளா் ஆனந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com