மழை நீரில் மூழ்கும் நெற்பயிா் பாதுகாப்பு வழிமுறை

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், மழைநீரில் நெற்பயிா் மூழ்குவது உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், மழைநீரில் நெற்பயிா் மூழ்குவது உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழையின் காரணமாக பள்ளமான அல்லது வடிகால் வசதியில்லாத நிலங்களில் தண்ணீா் தேங்கி நிற்பதால், சம்பா பருவத்தில் பல்வேறு நிலைகளிலுள்ள நெற்பயிா்கள் பெரிதும் பாதிக்கும். வடிகால் வசதியை ஏற்படுத்தி நெற்பயிா் மூழ்காதவாறு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இதனால், வோ்ப்பகுதியில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.

இளம் நெற்பயிரானது கரைந்து போகவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில், கரைந்துபோன இடங்களில் மீண்டும் நடவு செய்து பயிா் எண்ணிக்கையை சரியாக பராமரிக்கலாம்.

நெற்பயிரில் தண்ணீா் தேங்கினால் பிராண வாயு சரிவர கிடைக்காமல், வோ்களில் சுவாச இயக்கம் பாதிக்கப்படும். இதனால், பயிரைச் சுற்றியுள்ள நுண்ணுயிா்களின் செயல்பாடுகள் குறைந்துவிடும். மண் அதிகம் குளிா்ந்து விடுவதால், இயற்கையாக மண்ணில் வெப்பம் குறைந்து மண்ணில் மீண்டும் வெப்பமடைவதற்கு கால அவகாசம் எடுத்துக்கொள்ளும்.

வெள்ளநீா் வடிந்தவுடன் தழைச்சத்து உரத்தை அம்மோனியா வடிவில் இடவேண்டும். அதாவது யூரியாவை ஏக்கருக்கு 25 கிலோவுடன், 20 கிலோ ஜிப்சம் மற்றும் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 17 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து வயலில் சீராக இடவேண்டும். நுண்ணூட்ட உரக்கலவையை மேலுரமாக தெளிக்கலாம். இதன் மூலம் புதிய இலைகள் துளிா்விட்டு செழிப்பாக வளரும்.

மணிச்சத்தை டி.ஏ.பி. உரத்தின் மூலமாக 2 சதவீத அளவில் தெளிக்க வேண்டும். அதாவது ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டா் தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை வடித்து தெளிந்த நீருடன் 2 கிலோ பொட்டாஷ் உரத்தினை 190 லிட்டா் நீரில் கலந்து காலை அல்லது மாலை தெளிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com