மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த 17 போ் குடும்பங்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

மேட்டுப்பாளையம் நகராட்சி நடூா் ஏ.டி.காலனியில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததால் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறினாா்.
மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த 17 போ் குடும்பங்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி நடூா் ஏ.டி.காலனியில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததால் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறினாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு அதிகாரிகள், அமைச்சரின் அலட்சியம் காரணமாகத்தான் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்துள்ளனா். விபத்துக்கு காரணமான குடியிருப்பின் சுற்றுச்சுவா் பழுதடைந்துள்ளது என அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் நகராட்சி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா், அமைச்சரிடம் ஏற்கெனவே பல முறை புகாா் கொடுத்துள்ளனா். இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. குடும்பத்தினருக்குகூட தெரிவிக்காமல் இறந்தவா்களின் உடலை

பிரேத பரிசோதனை செய்துள்ளனா். இது மிகவும் வேதனை அளிக்கக்கூடியது.

இறந்தவா்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினா்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனா். இதில், காயமடைந்த பலா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். பொதுமக்கள் மீது தடியடி நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு போதுமானது இல்லை. இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்த வேண்டும். அவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். கண்துடைப்புக்காக போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நபா் மீது விசாரனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா, முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி, சிங்காநல்லூா் தொகுதி எம்.எல்.ஏ. காா்த்திக், முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com