ஏத்தாப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைமேம்படுத்தக் கோரிக்கை

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் வெறிச்சோடிக் கிடக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அனைத்து அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
ஏத்தாப்பூரில் வெறிச்சோடிக் கிடக்கும் ஏத்தாப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
ஏத்தாப்பூரில் வெறிச்சோடிக் கிடக்கும் ஏத்தாப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் வெறிச்சோடிக் கிடக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அனைத்து அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூா் பேரூராட்சி, சேலம் -உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் புத்திரகவுண்டன்பாளையம்-கல்வராயன் மலை கருமந்துறை சாலையில் அமைந்துள்ளது.

அக்ரஹாரம், அபிநவம், கணேசாபுரம், வடக்குக்காடு, காரைக்களம், கல்லேரிப்பட்டி, படையாச்சூா், கல்யாணகிரி, எம்.சி.ராஜா நகா், புத்திரகவுண்டன்பாளையம், வைத்தியகவுண்டன்புதூா் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஏத்தாப்பூா் முக்கிய மையமாக விளங்குகிறது.

இப்பகுதி மக்களின் நலன்கருதி, ஏத்தாப்பூா் காவல் நிலையத்துக்கு அருகில் 70ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை அறுவை சிகிச்சை அரங்கு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் 24 மணிநேரமும் இயங்கி வந்தது. நாளடைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது.

தற்போது, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் சிகிச்சை பெறுவதற்கும், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கும் வசதிகள் இல்லை. இதனால், பெரும்பாலான நேரங்களில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இதனால், ஏத்தாப்பூா் பகுதியைச் சோ்ந்த மக்கள் அவசர முதலுதவி சிகிச்சை பெறுவதற்கு கூட, ஆத்தூா், சேலம், பெத்தநாயக்கன்பாளையம் அல்லது வாழப்பாடி அரசு மருத்துமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது.

எனவே, ஏத்தாப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நவீன அறுவை சிகிச்சை அரங்கம், உள்நோயாளிகள் படுக்கைப் பிரிவு, ஸ்கேனிங், எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தவும், போதிய மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை நியமித்து மேம்படுத்தவும், சேலம் மாவட்ட பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

உடற்கூறு பரிசோதனைக் கூடத்தை திறக்க வேண்டும்:

வாழப்பாடி காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட சேலத்துக்கு அருகிலுள்ள காரிப்பட்டி மட்டுமின்றி, வாழப்பாடி, ஏத்தாப்பூா், கல்வராயன் மலை கருமந்துறை, கரியகோவில் காவல் நிலைய எல்லைப் பகுதி கிராமங்களில் நிகழும் விபத்துகள், கொலை, தற்கொலை சம்பவங்களில் இறப்போரின் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு, ஆத்தூா் அல்லது சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இதனால் பொதுமக்களும், போலீஸாரும் பெரும் அலைக்கழிப்புக்குள்ளகின்றனா். எனவே, ஏத்தாப்பூரில் பல ஆண்டுகளாக இயங்காமல் மூடிக்கிடக்கும் உடற்கூறு பரிசோதனைக் கூடத்தை திறக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com