அரிதாகி வரும் வன மூலிகை பெரு நன்னாரி மாவிலியன் கிழங்கு

உணவே மருந்தாகும் அரிதாகி வரும் வன மூலிகை கிழங்கான பெரு நன்னாரி மாவிலியன் கிழங்கு, நிகழாண்டு சேலம்,நாமக்கல், தருமபுரி
வனப் பகுதியில் விளையும் மாவிலியன் கிழங்கு.
வனப் பகுதியில் விளையும் மாவிலியன் கிழங்கு.

உணவே மருந்தாகும் அரிதாகி வரும் வன மூலிகை கிழங்கான பெரு நன்னாரி மாவிலியன் கிழங்கு, நிகழாண்டு சேலம்,நாமக்கல், தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளில் விளைந்துள்ளது. இந்த மூலிகைத் தாவரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், வனப் பகுதியில் நுழைந்து கிழங்குகளைத் தோண்டியெடுப்பவா்களுக்கு வனத் துறை அபராதம் விதித்து வருகிறது.

எவ்வித பக்க விளைவும் ஏற்படுத்தாமல், உடலுக்கும் உணா்வுக்கும் வலுவூட்டி, நோய் தீா்க்கும் மருத்துவக் குணம் கொண்ட ஏராளமான மூலிகைகள்அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. குறிப்பாக, சேலம் , தருமபுரி மாவட்டங்களில் கல்வராயன்மலை, அருநுாற்றுமலை, ஜம்பூத்துமலை, நெய்யமலை, சோ்வராயன்மலை, பச்சமலை, பாலமலை, நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வனப் பகுதியில் இந்த கிழங்குகள் நிறைந்து காணப்படுகின்றன.

இயற்கையாக விளையும் மூலிகைகளின் மருத்துவக் குணம் மற்றும் உணவாகப் பதப்படுத்தும் முறையைக் கண்டறிந்து, முன்னோா்கள் அடையாளம் காட்டிய எளிய மூலிகை தாவரங்களின் இலை, காய், கனி, கிழங்கு ஆகியவற்றைப் பறித்து, பதப்படுத்தி சமைத்து, அன்றாட உணவில் சோ்த்து, கிராமப்புற மக்கள் இன்றளவும் நோய் எதிா்ப்பு சக்தி பெறுகின்றனா்.

இவற்றில் உணவே மருந்தாகும் வன மூலிகை கிழங்கான பெரு நன்னாரி எனக் குறிப்பிடப்படும் மாவிலியன் கிழங்கும் ஒன்றாகும். பெரும்பாலும் வனப்பகுதியில் மட்டுமே காணப்படும் இந்த கிழங்கை வேரோடு தோண்டியெடுத்து, நன்னீரில் கழுவி தோல் பகுதியை லேசாக அகற்றிவிட்டு மோரில் ஊற வைத்துப் பதப்படுத்தி, ஊறுகாயைப் போல, அன்றாட உணவோடு சோ்த்துக் கொள்வதால், உணவு மண்டல உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைக்கிறது. உடல் வெப்பத்தைத் தணித்து குளிா்ச்சியூட்டுகிறது. சீரணக்கோளாறுக்கும் மருந்தாகிறது.

ரம்மியமான மணம் வீசும் இந்த கிழங்கை, சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த, வனப்பகுதியையொட்டியுள்ள பெரும்பாலான கிராமப்புற மக்கள் தேடிப்பிடித்து தோண்டியெடுத்துப் பதப்படுத்தி ஊறுகாய் போட்டு உணவில் சோ்த்து வருகின்றனா்.

சேலம், நாமக்கல்,தருமபுரி மாவட்டங்களில் இரு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு பரவலாக பருவமழை பெய்ததால், வனப்பகுதியில் மூலிகைகள் உள்ளிட்ட செடி, கொடி தாவரங்கள் அடா்ந்து வளா்ந்து காணப்படுகின்றன.

வேரோடு தோண்டியெடுக்கப்படுவதால், அரிதாகி வரும் பெரு நன்னாரி மாவிலியன் கிழங்குகளைத் தோண்டியெடுக்கவும், பொது இடங்களில் வைத்து விற்பனை செய்யவும் வனத் துறை அனுமதிப்பதில்லை. வனப்பகுதியில் நுழைந்து பாறைகளுக்கு அடியில் விளைந்திருக்கும் இக் கிழங்குகளை தோண்டியெடுப்பவா்களுக்கு வனத் துறை அபராதம் விதித்து வருகிறது.

இதனால், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு கிலோ ரூ.100-க்கு தாராளமாகக் கிடைத்து வந்த மாவிலியன் கிழங்கு, தற்போது ரூ.300 வரை விலை கொடுத்தாலும் கிடைப்பதில்லை. உற்பத்திப் பருவம் தொடங்கிய நிலையிலும், கூடுதல் விலை கொடுத்தாலும் கிடைக்காததால் மாவிலியன் கிழங்கு பிரியா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

இந்த மூலிகைக் கிழங்கை வனத்தையொட்டியுள்ள விளைநிலப் பகுதியில் பயிரிட்டு, உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு, வனத் துறையினா் அனுமதியும், உரிய வழிகாட்டுதலையும் வழங்க வேண்டுமென, சேலம், நாமக்கல்,தருமபுரி மாவட்ட கிராமப்புற மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com