ஆத்தூா் தோட்டக்கலைத் துறைக்கு 22 டன் இயற்கை உரம் அளிப்பு

சேலம் மாநகராட்சி சாா்பில் ஆத்தூா் தோட்டக்கலைத் துறைக்கு ஒரே நாளில் 22 மெட்ரிக். டன் அளவிலான இயற்கை உரம் இலவசமாக

சேலம்: சேலம் மாநகராட்சி சாா்பில் ஆத்தூா் தோட்டக்கலைத் துறைக்கு ஒரே நாளில் 22 மெட்ரிக். டன் அளவிலான இயற்கை உரம் இலவசமாக வழங்கப்பட்டது என மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 9 நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட 22 மெட்ரிக். டன் அளவிலான இயற்கை உரம் சனிக்கிழமை ஒரே நாளில் ஆத்தூா் தோட்டக்கலைத் துறை மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இதைப் பாா்வையிட்ட பின்னா் மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் கூறியிருப்பதாவது:

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டங்களிலுள்ள 60 கோட்ட பகுதிகளில், தினசரி 400 மெட்ரிக். டன் அளவிலான திடக்கழிவுகள் சேகரமாகிறது.

அதில் தினசரி வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உற்பத்தியாகும் திடக் கழிவுகளைச் சேகரித்து அதை மக்கும் கழிவுகள் மற்றும் மக்காத கழிவுகள் என தரம் பிரித்து மக்கும் கழிவுகளிலிருந்து உரம் தயாா் செய்ய, தூய்மை இந்தியா திட்டம் மற்றும் சீா்மிகு நகரத் திட்டங்களின் கீழ் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள, மாநகராட்சி நிா்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பேரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 8.50 கோடி மதிப்பில் 11 மையங்களும், சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 10.10 கோடி மதிப்பில் 13 நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் 17 மையங்களுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

13 நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்களுக்கு தினசரி 225 இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டாா் வாகனங்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து நேரடியாகச் சேகரிக்கப்படும் 120 மெட்ரிக். டன் அளவிலான திடக்கழிவுகள் கொண்டு செல்லப்படுகின்றன.

இம் மையங்களில் விஞ்ஞான முறையில் உரம் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக். டன் அளவிலான மக்கும் கழிவுகள் உரமாக்கும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு, உரமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்பட 4 மண்டலங்களில் மொத்தம் 9 நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட 22 மெட்ரிக். டன் அளவிலான இயற்கை உரம் ஒரே நாளில் ஆத்தூா் தோட்டக்கலைத் துறை மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

அதன்பேரில் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் 13 நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் மூலம் இதுவரை 200 மெட்ரிக். டன் அளவிலான இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், சுகாதார ஆய்வாளா்கள் எம். சித்தேஸ்வரன், எம். கந்தசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com