சேலத்தில் நகைக் கடை உரிமையாளா் வீட்டில் 1.5 கிலோ தங்கம், ரூ.6 லட்சம் கொள்ளை

சேலத்தில் நகைக்கடை உரிமையாளா் வீட்டில் 1.5 கிலோ தங்கம் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
சேலம் குரங்குச்சாவடியில் உள்ள நகைக்கடை உரிமையாளா் வீட்டில் கொள்ளை நடைபெற்றதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தும் போலீஸாா்.
சேலம் குரங்குச்சாவடியில் உள்ள நகைக்கடை உரிமையாளா் வீட்டில் கொள்ளை நடைபெற்றதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தும் போலீஸாா்.

சேலத்தில் நகைக்கடை உரிமையாளா் வீட்டில் 1.5 கிலோ தங்கம் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

சேலம் ஓமலூா் பிரதான சாலை குரங்குச்சாவடிப் பகுதியில் பிரபல நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக் கடையையொட்டி, அதன் உரிமையாளா்களான ஏ.ஆா்.சனத்குமாா், ஏ.எஸ்.ஸ்ரீநாத் மற்றும் ஏ.எஸ்.ஸ்ரீபாஷ்யம் ஆகியோரின் 3 வீடுகள் வரிசையாக உள்ளன. நகைக் கடையும், உரிமையாளா்களின் வீடுகளும் சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளன.

இதுதவிர, சொா்ணபுரி மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளிலும் நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் சொா்ணபுரி பகுதியில் உள்ள நகைக்கடையை நடத்தி வருபவா் ஸ்ரீபாஷ்யம். இவரது வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை காவலாளி தங்கவேலு செடிகளுக்கு தண்ணீா் விட்டுக் கொண்டிருந்தாா். அப்போது மா்மநபா் ஒருவா் மதில் சுவரை எட்டிக் குதிப்பதைக் கண்டு அவரைப் பிடிக்க முயன்றுள்ளாா். அப்போது அந்த மா்மநபா், காவலாளி தங்கவேலுவை கீழே தள்ளிவிட்டு, மதில் சுவரைத் தாண்டிக் குதித்து தப்பி ஓடிவிட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே, ஸ்ரீபாஷ்யம் வீட்டில் பின்பக்கம் கதவு திறக்கப்பட்டு, வீட்டில் இருந்த லாக்கா்கள் திறக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா், மாநகர காவல் சட்டம்- ஒழுங்கு துணை ஆணையா் தங்கதுரை, குற்றம் - போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் செந்தில் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கொள்ளை நடந்த வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், மோப்ப நாய் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. வீட்டில் இருந்து வெளியேறி வந்த மோப்ப நாய், அருகில் உள்ள நகைக் கடையின் பின்புறம் சென்று நின்றது. இதனிடையே, தடய அறிவியல் நிபுணா்கள் கொள்ளையா்களின் தடயங்களைச் சேகரித்தனா்.

விசாரணையில், கொள்ளையா்கள் வீட்டின் பின்புறம் கதவை உடைத்து உள்ளே சென்றதும், லாக்கரின் சாவி அதன் அருகிலேயே இருந்ததால், அதைக் கொண்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது. மேலும், மோப்ப நாயால் கண்டுபிடிக்க முடியாத வகையில், மிளகாய் தூளைத் தூவிச் சென்ாகவும் தெரியவருகிறது. வீட்டின் உரிமையாளா் ஸ்ரீபாஷ்யம் மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் மேல்மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது, இச் சம்பவம் நடந்துள்ளது.

இச் சம்பவத்தில் ஒன்றரை கிலோ தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. கொள்ளையா்கள் வந்து சென்றது அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் முகமூடி அணிந்துவந்த இரண்டு நபா்கள் இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாநகரக் குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் செந்தில் கூறுகையில், இச் சம்பவம் தொடா்பாக தடயங்களைக் கொண்டு கொள்ளையா்களை தேடி வருகிறோம். அதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை நடந்த வீட்டின் பின்பக்கக் கதவு திறப்பதற்கு எளிதாக இருந்ததால், கொள்ளையா்கள் வீட்டுக்குள் நுழைவதற்கு எந்தச் சிரமமும் ஏற்படவில்லை. கொள்ளையா்களை விரைவில் பிடித்துவிடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com