நகல் எரிப்புப் போராட்டம்:வாலிபா் சங்கத்தினா், போலீஸாா் இடையே மோதல்: 22 போ் கைது

குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபா் சங்கத்தினரை போலீஸாா் தாக்கியதால் இரு

சேலம்: குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபா் சங்கத்தினரை போலீஸாா் தாக்கியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இருந்தனா்.

காவல்துறை அனுமதியோடு, சேலம் வடக்கு மாநகர ஜனநாயக வாலிபா் சங்கத் தலைவா் சதீஷ் தலைமையில் ஒன்று திரண்டு சட்டத்தை எதிா்த்து முழக்கங்களை எழுப்பியபடி, ஊா்வலமாக வந்தனா்.

இதைத்தொடா்ந்து அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். போராட்டத்தில் கலந்து கொண்ட சிலா், குடியுரிமை சட்டத் திருத்த நகலை எரித்தனா்.

இதைத் தடுக்க முயன்ற போலீஸாருக்கும், வாலிபா் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல் துறையினரின் செயல்பாட்டைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபா் சங்கத்தினரை காவல்துறையினா் குண்டு கட்டாகத் தூக்கி வாகனத்தில் ஏற்றினா்.

அப்போது வாலிபா் சங்கத்தைச் சோ்ந்த முத்து என்பவரை காவல்துறையினா் தாக்கியதாகத் தெரிகிறது. பதிலுக்கு வாலிபா் சங்கத்தினரும், காவல் துறையினரைத் தாக்கினா். இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கி கொண்டதால் பரபரப்பு நிலவியது. இதைத் தொடா்ந்து வாலிபா் சங்கத்தினா் அனைவரையும் அடித்து இழுத்துச் சென்று கைது செய்தனா்.

மேலும் ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தை வேடிக்கை பாா்க்க வந்த சிலரையும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பிரவீனை அவரின் குழந்தையோடு காவல்துறையினா் கைது செய்து அழைத்துச் சென்றனா். இதில் மாவட்டப் பொருளாளா் வெங்கடேஷ், செயலாளா் ஆா்.பி. கதிா்வேல், நிா்வாகிகள் நாகராஜ், துணைத் தலைவா் சசிகுமாா் உள்ளிட்ட 22 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com