சுடச்சுட

  

  சங்ககிரி வருவாய் கோட்டத்தில் சிறப்பு குறைதீர் முகாம்

  By DIN  |   Published on : 13th February 2019 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சங்ககிரி வருவாய் உள்கோட்ட அளவில், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
  சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தி, மனுக்களைப் பெற்று அங்கேயே தீர்வு காணுவது என்ற அடிப்படையில், 2-ஆவது முறையாக சங்ககிரி வருவாய் கோட்ட அளவில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
  சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமை வகித்து, வருவாய்த் துறையின் சார்பில் 56 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, 31 பேருக்கு நத்தம் பட்டா, விதவைச் சான்று 3 பேருக்கும், மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு உதவித்தொகை உள்ளிட்ட 167 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 24  லட்சத்து 44 ஆயிரத்து 228 மதிப்பீட்டில் வழங்கினார்.
  பின்னர் அவரிடம் சங்ககிரி, எடப்பாடி வட்டப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, கல்விக கடன் உதவி உள்ளிட்டவை கோரி 365 மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்ற அவர், அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கினார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ருக்மணி, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஜி.வேடியப்பன், வட்டாட்சியர்கள் சங்ககிரி சி.ரவிச்சந்திரன், எடப்பாடி கேசவன், சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் கோவிந்தராஜ், மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
  காவிரி குடிநீர் விநியோகிக்கக் கோரி மனு 
  சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட முனியப்பம்பாளையம், உதயம் காலனி பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக மாதம் ஒரு முறை மட்டுமே காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, 15 நாள்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில்
  தெரிவித்துள்ளனர்.
  இதேபோல், சங்ககிரி தாமஸ் காலனி, நாகிசெட்டிப்பட்டி, பாரதி நகர், சங்ககிரி நகர், கஸ்தூரிபட்டி, சங்ககிரி ஆர்.எஸ். உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி குடிநீர் 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே வருவதாக பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
  இம்மனுக்களை பெற்ற ஆட்சியர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர்களுக்கு இப்பிரச்னை குறித்து உடனடிநடவடிக்கை எடுத்து அறிக்கை தர உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai