சுடச்சுட

  

  தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது: சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க மாநில பொதுச் செயலர் ரவீந்திரநாத்

  By DIN  |   Published on : 13th February 2019 10:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது என சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்தார்.
  இது தொடர்பாக,  அவர் சேலத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:  தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது.  இதனால் நோயாளிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.  இதனால், வெளியே உள்ள தனியார் மருந்துக் கடைகளில் இருந்து மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
   தனியார்  மருந்து நிறுவனங்கள் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி,  அரசிடம் அதிக விலை எதிர்பார்க்கின்றன.  எனவே,  மத்திய,  மாநில அரசுகள் உடனே இதில் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதே நிலை இந்தியா முழுவதும் உள்ளதால்தான்,  போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டமும் முடங்கியுள்ளது.
   மத்திய,  மாநில அரசுகள் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் அத்தியாவசிய மருந்துகளையும், தடுப்பூசிகளையும் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டால் மட்டுமே இந்தியாவின் மருத்துவத் தேவைகளை உறுதி செய்ய முடியும்.  இந்திய மருத்துவக் கவுன்சிலை ஒழித்துவிட்டு, அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தைக் கொண்டு வருவதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
       ஏழை, எளிய மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் சிறிய மருத்துவ நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் வகையில் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்ட விதிமுறைகளில் உடனடியாக திருத்தம் கொண்டு வர வேண்டும்.  இல்லையென்றால்,  சிறிய மருத்துவ நிறுவனங்கள் மூடப்படும் அவல நிலைக்கு தள்ளப்படும்.  இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.
  மருந்து தட்டுப்பாட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில்,  மாவட்ட அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.  முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தை மத்திய அரசின் திட்டத்தோடு இணைப்பது தாய்மார்கள், கர்ப்பிணிகளின் நலனுக்கு எதிரானது.  
  நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் துணை சுகாதார நிலையங்களையும், சுகாதார மற்றும் நல மையங்களாக பெயர் மாற்றி தனியாரிடம் மத்திய அரசு  கொடுப்பது மக்களின் நலனுக்கு எதிரானது.  இந்த முயற்சியைக் கைவிட வேண்டும்.  நாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்கள் 19 விழுக்காடும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் 25 விழுக்காடும், சமூக மருத்துவக் கூடங்கள் 22 விழுக்காடும் பற்றாக்குறையாக உள்ளன என்றார்.
  பேட்டியின் போது,  பாராமெடிக்கல் கல்வி மற்றும் நலச் சங்க மாநிலப் பொதுச் செயலர் கே.விஜயகுமார், முற்போக்கு பேரவை மாவட்டச் செயலர் பி.நீலகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai