சுடச்சுட

  

  பெரியார் பல்கலை. தேர்வு நடைமுறையில் மாற்றம்: துணை வேந்தர் பொ.குழந்தைவேல்

  By DIN  |   Published on : 13th February 2019 10:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு நடைமுறையில் அடுத்த கல்வியாண்டு முதல் மாற்றம் செய்யப்பட உள்ளதாக துணை வேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.
  பெரியார் பல்கலைக்கழகத்தில் சேலம் உள்பட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 1.25 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரண்டு தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் இருந்து அனுப்பப்படும் மதிப்பெண்ணுக்கும், இறுதியாக பல்கலைக்கழகத்தால் வெளியாகும் மதிப்பெண்ணுக்கும் வித்தியாசங்கள் இருப்பதாக புகார் எழுந்தது. மேலும், நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த 30-க்கும் மேற்பட்ட ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்.) மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்தில் கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்டதாக, புகார்
  தெரிவிக்கப்பட்டது.
  இதுகுறித்து விசாரணை நடத்திய ஆட்சிக்குழு உறுப்பினர் பாலசந்திரன், தேர்வாணையர் (பொ) முத்துசாமி மற்றும் ஆங்கில துறைத் தலைவர் சங்கீதா ஆகியோர் கொண்ட மூன்று பேர் குழு, குறிப்பிட்ட மாணவர்களுக்கு கூடுதல், மதிப்பெண் வழங்கப்பட்டதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, தற்காலிக பணியாளர் தாமஸ், தொகுப்பூதிய பணியாளர் சத்தியப்பிரியா ஆகியோரை பணி நீக்கம் செய்து துணை வேந்தர் குழந்தைவேல் உத்தரவிட்டார். மேலும், தேர்வாணையர் அலுவலக அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
  இதுகுறித்து துணை வேந்தர் பொ.குழந்தைவேல் கூறியது: தேர்வாணையர் அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும் வகையில், ஆட்சிக்குழு உறுப்பினர் பாலச்சந்திரன் தலைமையில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
  வெளிப்படைத் தன்மை மற்றும் விடைத்தாள் திருத்தப் பணியில் புதிய நடைமுறைகள் மேற்கொள்ள உள்ளோம். இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டத்துக்கென நான்கு தனித்தனி பிரிவுகள் உருவாக்கப்படும். மேலும், தேர்வாணையரைத் தவிர வேறு யாரும் மதிப்பெண் பட்டியலை பார்வையிடாத வகையில் புதிய சர்வர் அமைக்கப்படும். அடுத்த மூன்று மாதத்தில் தேர்வாணையர் அலுவலக நடைமுறைகள் அனைத்தும் கணினி மூலம் ஆன்லைன் முறையில் மாற்றப்படும்.
  பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் தேர்வு நடைமுறைகள் நடப்புக் கல்வியாண்டில் மாற்றப்பட்டுள்ளன. இதில் 40-க்கு 35 (அக மதிப்பெண் - 25) என்ற அளவில் தேர்வு நடைமுறையில் கேள்வி கேட்கும் முறைகள் மாற்றம் செய்யப்பட்டு வெற்றிகரமாக தேர்வுகள்  நடத்தப்பட்டுள்ளன.
  இதை பின்பற்றி, அடுத்த கல்வியாண்டு முதல்  இணைவு பெற்ற கல்லூரிகளிலும் இந்த நடைமுறைகள் செயல்படுத்தப்பட 
  உள்ளன. 
  இதன்மூலம், பல்கலைக்கழகத் தேர்வுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் முழுக்க முழுக்க திறமைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்படும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai