சுடச்சுட

  

  விவசாயிகளுக்கு ஓய்வு கால உதவித்தொகை வழங்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் தீர்மானம்

  By DIN  |   Published on : 13th February 2019 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  60 வயதைக் கடந்த விவசாயிகள் அனைவருக்கும் ஓய்வு கால உதவித்தொகையாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 26-ஆவது மாநில மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது. மூன்று நாள் நடைபெறும் மாநாட்டில், 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை விவாத தொடர்ச்சி, வரவு-செலவு, தகுதி ஆய்வுக்குழு அறிக்கை மற்றும் பி.எஸ்.மாசிலாமணி, த.இந்திரஜித், சி.எம்.துளசிமணி, பி.பெரும்படையார் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
  மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விளைபொருளுக்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
  வறட்சி, வெள்ளங்களில் பயிர் காப்பீடு வழங்கவும், பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கஜா புயல் பாதிப்புக்குள்ளான தென்னை உள்ளிட்ட மரங்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட
  வேண்டும்.
  தூத்துக்குடியில் வேதாந்த குழுமத்துக்கு சொந்தமான தாமிர உருக்கு ஆலையின் கழிவுகளால் சுற்றுப்புறச் சூழல் பெரிதும் பாதிப்படைகிறது. மக்கள் நலனை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும்.
  வேளாண் தொழில் பாதுகாப்பு திட்டங்கள் வேண்டும். அமெரிக்கன் படைப்புழுவால் பாதிப்படைந்த மக்காச் சோளத்துக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு முதியோர் ஓய்வு கால உதவித் தொகை வழங்க வேண்டும். 60 வயதைக் கடந்த நிலையில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஓய்வு கால உதவித் தொகையாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
  காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டுவதை கைவிட வேண்டும். காவிரி நதியின் குறுக்கே எந்த ஒரு அணையையும்; தமிழக காவிரி உரிமையை தடுக்கும் எந்த ஒரு செயலையும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசும், கர்நாடக அரசும் ஈடுபடக் கூடாது.
  விவசாயிகள் நலத்துறை அமைத்திட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தனி நிதி நிலை அறிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து அவையில் முன் வைக்க வேண்டும்.
  பால் லிட்டருக்கு கொள்முதல் விலையாக ரூ.45 வழங்க வேண்டும்.  தினசரி 1 கோடி லிட்டருக்கு மேல் கொள்முதல் செய்யும் அளவுக்கு ஆவின் கட்டமைப்புகளை உருவாக்கி கொள்முதல் செய்யவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சத்துணவோடு பால் சம்பந்தமான உப பொருள் தயார் செய்து அரசு அல்லது கூட்டுறவு அமைப்புகள் மூலம் வழங்கப்பட வேண்டும். 
  பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணத்தை வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு முழுமானியத்தில் பாதுகாப்பு கொட்டகைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். பருவமழை பொய்த்த பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.
  ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து அரசிதழில் வெளியிட வேண்டும். சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலைக்காக விவசாய நிலம் எடுப்பதை கைவிட வேண்டும். விவசாய நிலங்களையும், விவசாய ஆதாரங்களையும் அழிக்கும் இத்திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai