மது அருந்த மனைவி பணம் கொடுக்காததால் வீட்டுக்கு தீ வைப்பு
By DIN | Published On : 14th February 2019 09:41 AM | Last Updated : 14th February 2019 09:41 AM | அ+அ அ- |

சேலத்தில் மது அருந்த மனைவி பணம் கொடுக்காததால், வீட்டுக்கு தீ வைத்தவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வெங்கடாசலம் (39), வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந் நிலையில், போதைக்கு அடிமையான வெங்கடாசலம் புதன்கிழமை காலை மனைவிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளார். தனலட்சுமி பணம் கொடுக்காததைத் தொடர்ந்து, வெங்கடாசலம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெங்கடாசலம், வீட்டின் சமையல் எரிவாயு உருளையை திறந்துவிட்டாராம். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தனலட்சுமி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தார்.
வீடு முழுவதும் எரிவாயு நிரம்பிய நிலையில், வெங்கடாசலம் வீட்டின் வெளியே இருந்து ஜன்னல் வழியாக தீக்குச்சியைப் பற்றவைத்து உள்ளே போட்டுள்ளார். இதனால் பயங்கர சத்தத்துடன் எரிவாயு உருளை வெடித்து, வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்களும் சேதமடைந்தன.
இதுகுறித்து வீட்டின் அருகில் வசித்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சேலம் நகர தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து சூரமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய வெங்கடாசலத்தைத் தேடிவருகின்றனர்.