ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சிலைக்கு அமைச்சர், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் அண்ணா பூங்கா மணி மண்டபத்தில்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் அண்ணா பூங்கா மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சேலம் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மணி மண்டபத்தைத் திறந்து வைத்த முதல்வர், அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார்.
அந்த வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், எம்.பி.-க்கள் வி. பன்னீர்செல்வம், பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏ-க்கள் செ.செம்மலை, ஜி.வெங்கடாஜலம், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) வந்தனா கார்க்,  மாவட்ட வருவாய் அலுவலர் டி. திவாகர், வருவாய் கோட்டாட்சியர் செழியன், கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எடப்பாடியில்... கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட நத்தகாட்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அட்மா திட்டக் குழுத் தலைவர் கரட்டூர்மணி அதிமுக கொடியை ஏற்றி வைத்து, ஜெயலலிதாவின் படத்துக்கு மலர்த் தூவி மரியாதை செய்தார்.
அதைத் தொடர்ந்து வேட்டி, சேலை மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய அதிமுக. வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
முன்னதாக எடப்பாடி நகரில் முன்னாள் சேர்மன் டி. கதிரேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் ஆலய வளாகத்தில் 71 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செட்டிமாங்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் மாதேஸ்வரன் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
வாழப்பாடியில்... வாழப்பாடி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், வேப்பிலைப்பட்டி, சிங்கிபுரம், துக்கியாம்பாளையம், சென்றாயன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 71-ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. 
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் தூவியும், நிர்வாகிகளும், தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.  ஒன்றியச் செயலாளர் சதீஸ்குமார், நகரச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட ஜெ. பேரவை பொருளாளர் குபாய் (எ) குபேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
துக்கியாம்பாளையம் கமலாலயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. விழாவில், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அனிதாபழனிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேமுதிக-வில் இருந்த விலகிய துக்கியாம்பாளையம் கிளை நிர்வாகி பெருமாள்ராஜ் அதிமுக-வில் இணைந்தார்.
சென்றாயன்பாளையம் கிளை அதிமுக-சார்பில் நடைபெற்ற  விழாவில், ஒன்றியச் செயலாளர் சதீஸ்குமார் தலைமையில், முதியோர்கள் மற்றும் ஏழை எளியோர்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டன.
சங்ககிரியில்...  சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட இவ்விழாவுக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம்.எஸ். மணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நகரச் செயலர் ஆர். செல்லப்பன், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.சி.ஆர். ரத்தினம், முன்னாள் தொகுதிச் செயலர் வி.ஆர். ராஜா, ஒன்றிய இளைஞர் அணி செயலர் ஏ. நீதிதேவன், நகரப் பொருளாளர் ஆர். சந்திரசேகரன், முன்னாள் நகரத் துணைச் செயலர் என். காளியப்பன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com