முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
குடிநீர் வரி, வீட்டு வரி உயர்வைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
By DIN | Published On : 28th February 2019 10:43 AM | Last Updated : 28th February 2019 10:43 AM | அ+அ அ- |

குடிநீர் வரி, வீட்டு வரி உயர்வைக் கண்டித்து கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியால், அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் ரூ.90-ஆக இருந்த குடிநீர் வரி ரூ.200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 சதவீதம் வீட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கன்னங்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் இணைய சேவை இயங்கவில்லை என மக்கள் தொடர்ச்சியாக அலைக்கழிக்கப்பட்டு வருவதைக் கண்டித்தும், பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்தும், கன்னங்குறிச்சி பகுதிகளில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு முறையாக குடிநீர் வழங்குவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் கன்னங்குறிச்சி பேரூராட்சியை முற்றுகையிட முயற்சித்தனர். அப்போது, கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்கவேல் தலைமையிலான காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி, இப் பகுதியில் போராட அனுமதி இல்லை என்றனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பி.ராமமூர்த்தி, மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக மனு கொடுக்க செல்ல அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த காவல் துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பொதுமக்கள் கன்னங்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின் ஐந்து பேரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர். பேரூராட்சி நிர்வாக அலுவலர் அங்கு இல்லாததால் பேருராட்சி அலுவலகத்தில் மனு அளித்து அவர்கள் திரும்பினர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பி.ராமமூர்த்தி, தாலுகா செயலர் சுந்தரம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சந்திரன், டி.பரமேஷ்வரி, தாலுகா செயலர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.