முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
தரமான எள் விதை உற்பத்தி: விதைச் சான்று உதவி இயக்குநர் விளக்கம்
By DIN | Published On : 28th February 2019 10:44 AM | Last Updated : 28th February 2019 10:44 AM | அ+அ அ- |

தரமான எள் விதை உற்பத்தி செய்வது குறித்து விதைச் சான்று உதவி இயக்குநர் வே.ராஜதுரை விளக்கமளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: தமிழகத்தில் எண்ணெய் வித்து பற்றாக்குறையால் எள் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளதால், தரமான அதிகளவு முளைப்புத் திறன் கொண்ட, நிர்ணயம் செய்யப்பட்ட அளவு ஈரப்பதம் மற்றும் புறத்தூய்மை கொண்ட சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவது மிகவும் அவசியமாகும்.
எள் பயிரில் அறிவிக்கப்பட்ட ரகங்களாகிய டி.எம்.வி. 3, டி.எம்.வி. 4, டி.எம்.வி. 6, எஸ்.வி.பி.ஆர். 1, வி.ஆர்.ஐ. 1, வி.ஆர்.ஐ.(எஸ்.வி) 2, பையூர் 1 ஆகிய ரகங்களை விதை உற்பத்திக்கு பயன்படுத்தலாம். எள் பயிரில் பயிர் விலகு தூரம் ஆதார நிலைக்கு 100 மீட்டருக்கும், சான்று நிலைக்கு 50 மீட்டருக்கும் குறைவாக இருக்கக் கூடாது. விதைப் பண்ணையை விதைச் சான்று அலுவலர் குறைந்தபட்சம் 3 முறை ஆய்வு மேற்கொள்வார்.
ஆய்வின் போது, ஆதாரநிலைக்கு 0.1 சதவீதத்துக்கும், சான்று நிலைக்கு 0.2 சதவீதத்துக்கும் கூடுதலாக கலவன் இருந்தால் விதைப் பண்ணையை தள்ளுபடி செய்ய பரிந்துரைக்கப்படும். மேலும், எள் பயிரில் இலைப்புள்ளி நோய், குறித்தறிவிக்கப்பட்ட நோய் ஆகும். இந்த நோயின் தாக்குதல் ஆதார நிலைக்கு 0.5 சதவீதத்துக்கும், சான்று நிலைக்கு 1 சதவீதத்துக்கும் மேற்படாமல் இருந்தால்தான் அறுவடைக்கு அனுமதிக்கப்படும்.
அதன்பின் எள் சுத்திகரித்து விதை மாதிரி எடுக்கப்பட்டு, குறைந்தபட்ச முளைப்புத்திறன் 80 சதவீதத்துக்கும், ஈரப்பதம் 9 சதவீதத்துக்கு மேற்படாமலும், புறத்தூய்மை 97 சதவீதத்துக்கு குறைவில்லாமலும், தேறும் விதைக் குவியலுக்கு சான்று அட்டைகள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு அனுமதிக்கப்படும் என்றார்.