முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
பேரிடர் காலங்களில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவை அளப்பரியது: துணை வேந்தர் பொ.குழந்தைவேல்
By DIN | Published On : 28th February 2019 10:42 AM | Last Updated : 28th February 2019 10:42 AM | அ+அ அ- |

பெரியார் பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மண்டல அளவிலான திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
தொடக்க விழாவில் மண்டல ஒருங்கிணைப்பாளர் ம.ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பொ.குழந்தைவேல் தலைமை வகித்துப் பேசியது:
செஞ்சிலுவைச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தன்னார்வ சேவை உணர்வையும் அர்ப்பணிப்புணர்வையும் ஏற்படுத்திட வேண்டும். புயல், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவை அளப்பரியது. இன்றைய இயந்திர உலகில் இளைஞர்களிடம் குறைந்து வரும் மனிதாபிமான எண்ணங்களை வளர்த்திடவும், பிறருக்கு உதவும் மனோபாவத்தை உருவாக்கிடவும் செஞ்சிலுவைச் சங்கத்தினர் சேவையாற்றிட வேண்டும் என்றார்.
விழாவில், மேலாண்மை துறை இணைப் பேராசிரியர் பி.திருமூர்த்தி, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் வரலாற்றையும் தன்னார்வ தொண்டர்களின் செயல்பாடுகளையும் எடுத்துக் கூறினார். ஊட்டச்சத்து துறைத் தலைவர் பேராசிரியர் பி.நாஸினி சுகாதாரமான உணவு முறையினால் உடல்நலம் பேணுவது குறித்து பேசினார்.
பாலிடெக்னிக் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் முதலுதவி குறித்த விழிப்புணர்வையும், முதலுதவி செயல்முறைகளையும் எடுத்துக் கூறினார். பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், திட்டமிடல் குறித்து நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் பேசினார். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி மற்றும் மண்டல திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்த பயிற்சியில்
கலந்துகொண்டனர்.