கழிவு நீர் கால்வாய் வசதியின்றி சாலை அமைக்க எதிர்ப்பு
By DIN | Published On : 28th February 2019 10:43 AM | Last Updated : 28th February 2019 10:43 AM | அ+அ அ- |

பேளூர் பேரூராட்சியில் கழிவு நீர் கால்வாய் வசதியின்றி தார்ச் சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
வாழப்பாடியை அடுத்த பேளூர் பேரூராட்சி 15-ஆவது வார்டு நபிகள் நாயகம் தெரு குடியிருப்புப் பகுதிக்கு இதுவரை கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதனால், கழிவு நீரை வெளியேற்ற வழியின்றி அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதிக்கு தார்ச் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. பயன்பாட்டில் இருந்த சாலை பெயர்த்தெடுக்கப்பட்டு புதிய சாலை அமைப்பதற்கு ஆயத்தப் பணிகள் தொடங்கிய நிலையில், கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் தார்ச் சாலை அமைப்பதால் பலனில்லை என இப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், தார்ச் சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர் கால்வாய் அமைக்கவும், சீரான குடிநீர் விநியோகிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். சாலை அமைக்கும் பிரச்னைக்கு தீர்வுகாண இப்பகுதி மக்களுடன் பேரூராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.