கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு

சேலத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்தனர்.

சேலத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்தனர்.
சேலம் அழகு சமுத்திரம், கருங்கல்வாடி பகுதியைச் சேர்ந்த ரஜினி பழனிசாமி, சில அரசியல் தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் தனது கருத்தை பதிவு செய்து வந்துள்ளார். இதில் கோபமடைந்த பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சபரி (எ) சபரிநாதன்(30), தனது கூட்டாளிகளான மெய்யனூர் செல்வமூர்த்தி, பள்ளப்பட்டி சந்துரு மற்றும் திவாகர் ஆகியோருடன் கடந்த பிப். 12-ஆம் தேதி ரஜினி பழனிசாமியை கத்தி மற்றும் இரும்புக் குழாயால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ரஜினி பழனிசாமி சத்தம் போடவே, அப்பகுதி மக்களிடம் கொலை மிரட்டல் விடுத்து பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து அழகாபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து கடந்த பிப். 16-ஆம் தேதி சபரிநாதனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், கடந்த 2017 ஜனவரி மாதம் பள்ளப்பட்டி காவல் நிலைய சரகத்தில் சபரிநாதன் தனது கூட்டாளிகளுடன் அரசியல் கட்சியின் பேனரை கிழித்து தீ வைத்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாகவும்,  ரஜினி பழனிசாமியை தாக்கியதற்காகவும் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது தெரியவந்தது.
மேலும்,  சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நண்பரை பார்க்க வந்த பள்ளப்பட்டியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனை முன்விரோதம் காரணமாக சபரிநாதன் தனது கூட்டாளிகளுடன் கத்தி மற்றும் விறகுகட்டையால் கடுமையாக தாக்கியதற்காக சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளதும் தெரியவந்தது. 
இதையடுத்து, சபரிநாதன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், சட்டம்-ஒழுங்கு காவல் துணை ஆணையர் பி.தங்கதுரையின் பரிந்துரைப்படி, சேலம் மாநகர காவல் ஆணையர் கே.சங்கர் பரிசீலித்து, சபரிநாதனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க புதன்கிழமை ஆணை பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த சபரிநாதன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com