சாலையை சீரமைக்கக் கோரி மரக்கன்று நடும் நூதனப் போராட்டம்
By DIN | Published On : 04th January 2019 08:45 AM | Last Updated : 04th January 2019 08:45 AM | அ+அ அ- |

புதை சாக்கடை திட்டப் பணிக்காக வெட்டப்பட்ட சாலைகளை கடந்த 4 ஆண்டுகளாக சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சாலையில் மரங்களை நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி 30வது கோட்டத்துக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை அப்புசாமி செட்டி தெரு, மஜீத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதை சாக்கடை பணிக்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாலைகள் தோண்டப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பின்னர் சாலையை சீரமைக்காமல் இருப்பதால், சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதோடு, பொதுமக்கள் பயன்படுத்திட முடியாத நிலையில் உள்ளது.
சேலம் மாநகரின் முக்கிய பகுதியாகவும், வணிக நிறுவனங்கள் குறிப்பாக வெள்ளிக் கொலுசு உற்பத்தி செய்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சாலையாக உள்ளது.
சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்களும், வணிகர்களும், பல்வேறு அமைப்பினரும் சேலம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்து உள்ளனர். ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர், செவ்வாய்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் பயன்படுத்திட முடியாத நிலையில் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் சாலையில், மரங்களை நட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மேற்கொண்ட இந்த மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் போராட்டத்தைக் கைவிடாமல், காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள், எழுத்துப் பூர்வமாக சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவதாகக் கூறினர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த சாலை இதே நிலையில் நீடித்து வருகிறது. இந்த சாலையைப் பயன்படுத்துவோர் தினந்தோறும் கீழே விழுந்து செல்லும் அவல நிலை உள்ளது. இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.