அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க அரசு முடிவு: ஆசிரியைகள் விவரம் கேட்பு

தமிழகத்தில் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் இயங்கும்  அங்கன்வாடி மையங்களில் மட்டும்

தமிழகத்தில் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் இயங்கும்  அங்கன்வாடி மையங்களில் மட்டும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை தொடங்க தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி  நடுநிலைப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள்,  3, 4, 5 வயது பூர்த்தியான குழந்தைகளின் விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலங்கள் மூலம் கோரப்பட்டது. இந்த தகவல்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் 2,381 அங்கன்வாடி மையங்கள் இருப்பதும் அதில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் சேர தகுதியான குழந்தைகள் 52,933 பேர்  இருப்பதும் தெரியவந்துள்ளது. 
மேலும், நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்கள் சேலம் மாவட்டத்தில் 153,  அதில் 3,655 பேர், நாமக்கல் மாவட்டத்தில் 57 மையங்களில் 1,139 பேர், தருமபுரி மாவட்டத்தில் 72 மையங்களில் 1652 பேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 74 மைங்களில் 1,520 பேர் என மொத்தம் 356 மையங்களில் 7,966 குழந்தைகள் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க தயாராக உள்ளனர் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்களுக்கு பாடம் கற்பிக்க தமிழகம் முழுவதும் ஒன்றியங்களில் உபரியாக உள்ள ஆசிரியைகள் விவரங்களை கேட்டு தமிழக தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பாடம் போதிக்க ஒரு பெண் ஆசிரியையை  ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். ஏற்கெனவே, அந்தந்த மாவட்டங்களில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் விவரம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உபரியாக உள்ள ஆசிரியர்களில் ஒரு மையத்திற்கு ஒரு ஆசிரியை வீதம் ஒதுக்கீடு செய்யவேண்டும்.
 அவ்வாறு செய்யும்போது,  அந்தந்த ஒன்றியங்களிலிருந்தும் ஆசிரியைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு ஒன்றியங்களில்  இடைநிலை  ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும்போது அருகிலுள்ள ஒன்றியங்களில்  பணிமூப்பு  (சீனியாரிட்டி)  மாறாதவாறு ஒதுக்கீடு செய்யவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் மின்னஞ்சல் மூலம்  உபரியாக உள்ள ஆசிரியர்களில்   பெண் ஆசிரியைகளின் (இடைநிலை ஆசிரியர்கள்) விவரங்களை அனுப்பியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உபரி பெண் ஆசிரியைகள் 2,381 பேருக்கு வரும் வாரங்களில்,  அங்கன்வாடி மையங்களில்  பணியாற்றிட  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் 
உத்தரவுகளும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பது எப்படி என்பது குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளதாக  கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com