மக்களுக்காக அறவழியில் போராடுபவர்களை கைது செய்யும் காவல் துறை: இரா.முத்தரசன் புகார்
By DIN | Published On : 07th January 2019 08:40 AM | Last Updated : 07th January 2019 08:40 AM | அ+அ அ- |

மக்களுக்காக அறவழியில் போராடுபவர்களை போஸீஸார் கைது செய்து வருகின்றனர் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியில் அர்த்தநாரி வாத்தியாரின் 36-ஆவது நினைவு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு அக்கட்சியின் நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் பழ.ஜீவானந்தம் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க நிர்வாகி எஸ்.பி.தங்கவேல் வரவேற்றுப் பேசினார். மாவட்டச் செயலாளர் மோகன், மாநிலக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பேசியது: சேலத்தாம்பட்டியில் 300 ஏக்கர் பரப்பு கொண்ட ஏரியில் குடியிருப்புகள் அமைக்க முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். ஏழைகள் வசிக்கும் குடியிருப்புகள் காவல்துறை துணையோடு அகற்றப்படுகின்றன. ஆனால் சேலத்தாம்பட்டி ஏரியில் குடியிருப்புகள் கட்ட அரசே மண்ணைக் கொட்டி ஏரியை மூடி வருகிறது. மக்களுக்காக அறவழியில் போராடும் நிர்வாகிகளை போலீஸார் கைது செய்து வருகின்றனர். வழக்குப் போடுகின்றனர். காவல்துறை ஆளுவோரின் அடியாளாகச் செயல்பட்டு வருகிறது என்றார்.