சுடச்சுட

  

  ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்பில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்: காளைகளின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரிப்பு

  By DIN  |   Published on : 12th January 2019 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேலம் மாவட்டத்தில்,  வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம்,  ஆத்தூர்,  கெங்கவல்லி,  தலைவாசல்,  தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்ப்பதில் இளைய தலைமுறையினரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
  இதனால், ஜல்லிக்கட்டுக் காளைகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
  தமிழகம் முழுவதும் முன்னோர்கள் வழியில் மரபு மாறாமல், கிராமப்புற மக்களின் பாரம்பரியம், பண்பாடு,  கலாசாரத்தை சித்திரிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 
  தைத்திங்கள் முதல் நாளில் விவசாயத்துக்கு அச்சாரமாகத் திகழும் சூரியனுக்கும்,  இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் சூரியன் பொங்கலும், விவசாயிகளுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளை போற்றும் நோக்கில் மாட்டுப் பொங்கலும், நிறைவு நாள் காணும்பொங்கல், கரிநாளன்று காளைகளை வீரர்கள் அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் எருதுகளை கயிற்றில் கட்டி விரட்டும் எருது விடும் விழாவும் நடத்தி பொங்கல் பண்டிகை வார விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
  நிலத்தைச் சமப்படுத்தி விளைச்சலுக்கு ஏற்ப சீரமைக்கவும், ஏர் உழுவது முதல், விதைத்தல், கதிரடித்தல், அறுவடை செய்தல் ஆகிய பணிகளுக்கும், விளை பொருள்களையும், அத்தியாவசிய பொருள்களையும் ஏற்றிச் செல்லும் வண்டிகளை இழுப்பதற்கும், விவசாயிகளுக்கு காளைகளும்,  எருதுகளும் பெருமளவில் உறுதுணையாக விளங்கின.  
  ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக, நிலத்தைச் சீரமைப்பதில் தொடங்கி ஏர் உழுதல், விதைத்தல், கதிரடித்தல் மற்றும் அறுவடை செய்வது வரை அனைத்து பணிகளையும் குறைந்த செலவில் விரைந்து முடிக்கும் டிராக்டர்,  ரொட்டேவேட்டர், டோசர்,  பொக்லைன் உள்ளிட்ட நவீன வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகளே பயன்படுத்தப்படுகின்றன.
  விவசாயத்தில் காளைகளின் பயன்பாடு குறைந்து போனதால்,  அவற்றை வளர்ப்பதை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டனர்.  பால் கறந்து வருவாய் ஈட்டிக் கொடுக்கும் கறவை மாடு வளர்ப்பிலேயே பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.  தமிழகத்தில் காளைகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால்,  காளைகள் வளர்ப்பில் விவசாயிகளிடையே மேலும் ஆர்வம் குறைந்தது. இந் நிலையில்,  தமிழகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்த இளைஞர்களின் பெரிய போராட்டத்துக்குப் பிறகு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையைச் சட்டத் திருத்தம் செய்து மத்திய,  மாநில அரசுகள் நீக்கின. இதனைத்தொடர்ந்து,  தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு,  மஞ்சு விரட்டு மற்றும் எருது விடும் விழாக்கள் எழுச்சியாக நடைபெற்று வருகின்றன. 
  இதனால்,  ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரராகக் கலந்து கொள்வதிலும்,  ஜல்லிக்கட்டுக் காளைளை வளர்த்து போட்டியில் பங்கேற்கச் செய்வதிலும் இளைய தலைமுறையினரிடையே மீண்டும் ஆர்வம் அதிகரித்துள்ளது.  
  ஜல்லிக்கட்டுக் காளைகள் விவசாய அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படும் என்ற நிலையிலும்,  ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கச் செய்வதற்காகவே, சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம், பழனியாபுரம்,  விலாரிபாளையம், பொன்னாரம்பட்டி, இடையப்பட்டி,  தும்பல் மற்றும் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கோனேரிப்பட்டி,  நாகியம்பட்டி, ஆத்தூர் மஞ்சினி, கூலமேடு, கெங்கவல்லி,  பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்த்து வருவதும், போட்டியில் பங்கேற்பதற்கு பயிற்சியும் அளித்து வருகின்றனர்.  இதனால், சேலம் கிழக்கு மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு காளைகளின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
  இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கூறியதாவது:
  சேலம் மாவட்டத்தில்  தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி,  கூலமேடு, சிங்கிபுரம், கீரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.  கிராமங்கள் தோறும் காணும் பொங்கலன்று மஞ்சு விரட்டு,  எருதாட்டம் நடைபெறுகிறது.  கிராமப்புற மக்களின் பண்பாடு, கலாசாரத்தை சித்திரிக்கும் பராம்பரிய விழாவான ஜல்லிக்கட்டு விழாவில் மாடு பிடி வீரராகப் பங்கேற்பதிலும், ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்த்து,  ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கச் செய்வதிலும் ஆண்டுதோறும்  புத்துணர்வு கிடைக்கிறது.  இதனால், ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்பதில் இளைஞர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.  கடந்த மூன்றாண்டுக்கு முன்வரை 500 ஜல்லிக்கட்டுக் காளைகள் மட்டுமே வளர்க்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போது  1,500-க்கும் மேற்பட்ட காளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும் என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai