சுடச்சுட

  

  பொங்கல் பண்டிகையையொட்டி ஓமலூர் அருகே மாட்டுச் சந்தை திறப்பு

  By DIN  |   Published on : 12th January 2019 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஓமலூர் அருகே கடந்த ஆறு வாரங்களாக  மூடப்பட்டிருந்த பெருமாள்கோவில் மாட்டுச் சந்தை  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. 
  ஓமலூர் அருகே பெருமாள் கோவிலில் நடைபெறும் மாட்டுச்சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற பெரிய மாட்டுச் சந்தையாகும்.  வெள்ளிக்கிழமைதோறும் கூடும் இந்தச் சந்தைக்கு ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கோமாரி நோய் தாக்குதல் காரணமாக இந்தச் சந்தை கடந்த  ஆறு வாரங்களாக நடைபெறவில்லை.
  இதனால்,  விவசாயிகள் பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாத சூழ்நிலை  ஏற்பட்டதால் சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி  மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸிடம் மனு அளித்தனர். இதனையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் சந்தையைத்  திறக்க  ஆட்சியர் உத்தரவிட்டார்.
  இதனைத் தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு பிறகு சந்தை திறக்கப்பட்டதையொட்டி காளைகள்,  கறவை மாடுகள்,  சிந்து மாடுகள், நாட்டு மாடுகள், உழவு மாடுகள், எருமைகள் மற்றும் கன்றுகள் விற்பனை கொண்டு வரப்பட்டன.  மேலும், பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து காளைகள் மற்றும் கறவை மாடுகள் அதிகளவில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. மேலும்,  இந்தச் சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.  பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வந்திருந்து மாடுகளை விற்பனை செய்தும், வாங்கியும் சென்றனர்.
  பொங்கல் பண்டிகையையொட்டி   ஓமலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் எருதாட்டம்,  மஞ்சுவிரட்டு,  ஜல்லிக்கட்டு  விழாக்கள் நடத்துவது வழக்கம். நிகழாண்டு  ஜல்லிக்கட்டுக்கு தடை ஏதுமில்லாத நிலையில் மாடுகளை வாங்கிச் சென்று ஜல்லிக்கட்டுக்கு பயிற்சியளித்து வருகின்றனர். மேலும் எருதாட்டம்,  மஞ்சுவிரட்டு விழாக்களுக்காக காளைகளின் விற்பனையும் அதிகமாக இருந்தது.  
  ஓமலூர் மாட்டுச் சந்தையில் ஜல்லிக்கட்டு காளைகளின் விற்பனை  நடைபெற்றது. ஒரு காளை சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இந்தச் சந்தையில் வாரம்தோறும் சுமார் ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரைக்கும் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். ஆறு வாரங்களுக்கு பிறகு இந்த வாரம் கூடிய மாட்டுச் சந்தையில் சுமார் ரூ.25 கோடிக்கும் மேலாக வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai