சுடச்சுட

  

  சேலம் மாவட்டத்தில் கூலமேடு உள்பட 4 இடங்களில் ஜல்லிக்கட்டு: ஆட்சியர் தகவல்

  By DIN  |   Published on : 13th January 2019 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சேலம் மாவட்டத்தில் கூலமேடு, நாகியம்பட்டி, கெங்கவல்லி, தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஜன.18 ஆம் தேதி தொடங்கி, ஜன.27 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன என்று, மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
  சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி வட்டம், நாகியம்பட்டியில் ஜன.21, ஆத்தூர் கூலமேட்டியில் ஜன.18, கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லியில் ஜன.20, தம்மம்பட்டியில் ஜன.27 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதையொட்டி, மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தக் கோரும் பட்சத்தில் காவல் துறை அலுவலர்கள் போதுமான ஏற்பாடுகளைச் செய்யவும், பார்வையாளர்கள் அமரும் இடம், தகுதி சான்றிதழ் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தர நடவடிக்கை, மாடம் மற்றும் விளையாட்டு இடத்துக்கு இடையே போதுமான இடைவெளி, இரட்டைத் தடுப்பு வேலி அமைக்கும் பணி மேற்கொள்ள பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலர்கள் கால்நடைகளைப் பரிசோதித்து சான்று செய்திடவும், சுகாதாரத் துறையினர் பங்கேற்பாளர்களின் உடற்கூறுத் தகுதியை சான்றிதழ் செய்வதோடு, போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள், ஆம்புலன்ஸ் வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்திடவும், உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  ஊராட்சித் துறை மூலம் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் போதுமான அளவு குடிநீர் விநியோகம் செய்ய ஆவன செய்ய வேண்டும். போதுமான கழிப்பறை வசதிகள் மற்றும் தொற்று நோய் பரவாமல் இருக்க மருந்துகளைத் தெளிக்க வேண்டும். காளைகளைக் கட்டும் துறையில் சிறுநீர் கழிவுகளை உடனுக்குடன் அகற்றி தூய்மையைப் பராமரித்தல், விளையாட்டு நடைபெறும் கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி எல்லைகளுக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர் இப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  உதவி இயக்குநர் ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி துறைகள், பிராணிகள் நல வாரியத்துக்கு முறையே தகவல் அனுப்பி, அவர்களை முறையாக அழைத்து வந்து பார்வையாளர் மாடத்தில் உரிய இடத்தில் அமரச் செய்தல் மற்றும் சுதந்திரமாக நிகழ்வுகளை அவர்கள் பதிவு செய்ய ஆவன செய்யவும், ஜல்லிக்கட்டு விளையாட்டு முழுவதையும் ஒளிப்படம் பதிவு செய்தலை உறுதி செய்து ஒளிப்படம் மற்றும் புகைப்பட நகல்களுடன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மேற்பார்வை செய்தல் வேண்டும்.
  மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் எவ்வித அசம்பாவிதங்களையும் சமாளிக்கும் வகையில் தீயணைப்பு ஊர்தி உரிய உயிர்மீட்புக் குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்திடவும், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் உயிர் மீட்பு உபகரணங்கள் போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  விதிமுறைகள் கடைப்பிடிக்காவிடில் ஜல்லிக்கட்டு நடத்த சம்பந்தப்பட்ட கோட்டாட்சியரால் அனுமதி மறுக்கப்படும். சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கு இதுகுறித்து அறிக்கை அனுப்பவும், ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் எத்தனை மாடுகள் கலந்து கொள்ள வேண்டும் என்பதை காவல் துறையும், கோட்டாட்சியர் இணைந்து ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தை கணக்கீட்டு நிர்ணயம் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  அனுமதி பெற்று நடத்தும் ஜல்லிக்கட்டு அப் பகுதி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் முன்னின்று அனைத்துத் துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்து ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
  ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது (பொ) ரவிச்சந்திரன், இணை இயக்குநர் (மருத்துவம்) மருத்துவர் சத்யா, மாநகர துணைக் காவல் ஆணையர் பெ.தங்கதுரை, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வன் மற்றும் தொடர்புடைய அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai