சுடச்சுட

  


  ஆத்தூர் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா சனிக்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
  ஆத்தூரை அடுத்துள்ள ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளியில் பொங்கல் திருநாள் பள்ளித் தாளாளர் எஸ்.இளவரசு தலைமையில் நான்கு வகைக் குழுவாகப் பிரிந்து பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
  நிகழ்ச்சியில் செயலாளர் இ.இளையராஜா, முதல்வர் கிறிஸ்டோபர் ஜெர்மி ஆகியோர் கலந்துகொண்டனர்.
  இதேபோல ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனத்தில் பொங்கல் வைத்து, தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் செயலாளர் டி.மாசிலாமணி, பொருளாளர் பி.குமரேசன், கல்விக்குழுத் தலைவர் ஆர்.கனகராஜன்,துணைத் தலைவர் சுசிலா ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  மேலும் தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகை கல்லூரித் தலைவர் க.கைலாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் கை.ராஜவிநாயகம், முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
  தனியார் கல்லூரியில்... தம்மம்பட்டியிலுள்ள அன்னை தெரசா கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா சனிக்கிழமை தாளாளர் செல்வராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. சர்க்கரைப் பொங்கல் வைத்து படையல் செய்து வழிபட்டனர்.
  விழாவில் முதல்வர் சுரேஷ், துணை முதல்வர் தமிழ் ராஜேந்திரன், உதவிப்பேராசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் மாலதி உள்பட மாணவ,மாணவியர் பங்கேற்றனர்.
  சோனா கல்லூரியில்... சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
  சோனா கல்லூரியில் மகளிர் மேம்பாட்டு அமைப்பின் மூலமாக பொங்கல் திருவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
  குறிப்பாக மகளிர், மாணவர்கள் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்தல், உறியடி, கோலப் போட்டி, மருதாணி போடுதல், இயல் இசை, நடனம், ஆகிய நிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 
  சிறப்பு விருந்தினராக கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதற்கான ஏற்பாட்டை மகளிர் மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயகிருஷ்ணா, இலக்கியா மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
  பெரியார் பல்கலை.யில்... பெரியார் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
  பொங்கல் திருவிழாவையொட்டி, பெரியார் பல்கலைக்கழக முகப்பு கட்டடம் முன்பாக இரு பானைகளில் புத்தரிசியிட்டு தமிழ்த் துறை மாணவியர் ஒன்றிணைந்து பொங்கலிட்டனர். இதனையடுத்து மஞ்சள், கரும்புகளை சுற்றி வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். 
  துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தலைமையில், பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதில் பதிவாளர் (பொறுப்பு) கே.தங்கவேல், தேர்வாணையர் (பொறுப்பு) அ.முத்துசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆர்.பாலகுருநாதன், கே.ஜெயராமன் மற்றும் பேராசிரியர்கள்,மாணவ, மாணவியர், நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும், பொங்கல் மற்றும் கரும்புகளை துணைவேந்தர் பொ.குழந்தைவேல் வழங்கினார். இந் நிகழ்ச்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
  அன்னபூரணா பொறியியல் 
  கல்லூரியில்... சேலம் அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
  கல்லூரியின் நிறுவனர் தலைவர் அன்னபூரணி சண்முகசுந்தரம், கல்லுரி நிர்வாகத் துணைத் தலைவர் என்.வி.சந்திரசேகர், விநாயகா மிஷின்ஸ் ஆராய்ச்சிக் கல்விக் குழுமத்தின் இயக்குநர்கள் காமாட்சி சரவணன், அருணா சந்திரசேகர் மற்றும் முதுநிலை மேலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடக்கி வை கல்லூரி முதல்வர் அ.அன்புச்செழியன் தலைமை வகித்தார். துணை முதல்வர் சி.சரவணன் முன்னிலை வகித்தார்.
  மாணவ, மாணவியர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலைகளை அணிந்து வந்து பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கல்லூரி வளாகத்தில் கீற்றுக் கொட்டகைகள் அமைத்து மாக்கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி, செங்கற்கள் கொண்ட அடுப்பில் விறகுகளால் தீ மூட்டி மண்பானையில் பச்சரிசி வெல்லத்துடன் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என மாணவ, மாணவியர் உற்சாக குரல் எழுப்பினர். இதையடுத்து கரும்புகளுடன் சர்க்கரைப் பொங்கலை சுவைத்து மகிழ்ந்தனர். 
  பின்னர் கும்மி, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே கோலப்போட்டி, உறியடித்தல் போன்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பொங்கல் விழா ஏற்பாடுகளை கல்லூரி முதலாமாண்டு டீன் சரவணன், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai