பொங்கல் பண்டிகையால் வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

வாழப்பாடி தினசரி சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி வாழைத்தார்களின் விற்பனை அதிகரித்து, விலை உயர்ந்து கூடுதல் வருவாய் கிடைத்து


வாழப்பாடி தினசரி சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி வாழைத்தார்களின் விற்பனை அதிகரித்து, விலை உயர்ந்து கூடுதல் வருவாய் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சாகுபடியாகும் வாழைத்தார்களை, வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் கூடும் தினசரி காய்கறிச் சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகள் ஏல முறையில் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த வாழைத்தார்களை சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்து செல்கின்றனர். 
பொங்கல் பண்டிகை வழிபாட்டுக்கு வாழைப்பழம், இலையின் தேவை அதிகரித்து கூடுதல் விலை கிடைக்கும் என்பதால், பெரும்பாலும் மார்கழி மாதத்தின் இறுதியில் அறுவடை செய்யும் வகையில் திட்டமிட்டு விவசாயிகள் வாழையை பயிரிட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த சில தினங்களாக வாழைத் தோட்டங்களில் முதிர்ந்த வாழைத்தார்களை அறுவடை செய்து வாழப்பாடி தினசரி சந்தைக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு தேவை அதிகரித்துள்ளதால் வாழைத்தார்களை கொள்முதல் செய்வதற்கு, சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் குவிந்திருந்தனர். இதனால், வாழைத்தார்களின் விலை கணிசமாக உயர்ந்தது. கடந்த மாத இறுதி வரை அதிகபட்சமாக ரூ.300 வரை விலை போன ஒரு வாழைத்தார், சனிக்கிழமை ரூ.500 வரை விலை போனது. வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், பொங்கல் நேரத்தில் தேவை அதிகரித்து வாழைக்கு கூடுதல் விலைக் கிடைத்ததால் வாழப்பாடி பகுதியில் வாழை பயிரிட்டு பராமரித்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை, கீரப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த வாழை விவசாயிகள் கூறியதாவது:
வாழப்பாடி பகுதியில் நிகழாண்டு பருவ மழை ஏமாற்றிவிட்டது. நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து பாசனத்துக்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலும், ஆழ்துளைக் கிணறுகளில் கிடைக்கும் குறைந்த அளவிலான தண்ணீரைப் பயன்படுத்தி, சொட்டுநீர் பாசன முறையில் வாழைக்கு நீர்ப்பாய்ச்சி பராமரித்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக்கு தேவை அதிகரிக்கும் என்பதால், பத்து நாள்கள் வரை மரத்திலேயே இருப்பு வைத்திருந்து முதிர்ந்த வாழைத்தார்களை விற்பனைக் கொண்டு வருகிறோம். வறட்சியால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும் சிரமத்திற்கிடையே சாகுபடி செய்துள்ள வாழைத்தார்களுக்கு எதிர்பார்த்ததைப் போல கூடுதல் விலை கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com