சேலம்-செங்கப்பள்ளி 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக விரிவாக்கப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி

சேலம்-செங்கப்பள்ளி 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக விரிவாக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

சேலம்-செங்கப்பள்ளி 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக விரிவாக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மகுடஞ்சாவடியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் தெரிவித்தார்.
விழாவில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர், மகுடஞ்சாவடி பகுதிகளில் அடிக்கடி விபத்து நிகழ்வதால், இரு இடங்களிலும் உயர்மட்டப் பாலங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதே போல், ரூ.45 கோடியே 5 லட்சத்தில் சேலம் கந்தம்பட்டியில் மேம்பாலம், ஆத்தூர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள வசிஷ்ட நதியின் குறுக்கேயும், மத்திய சாலை திட்டத்தின் கீழ் புழுதிகுட்டை சந்துமலை சாலைப் பகுதியிலும், தும்பல் அருகில்  என 4  உயர்மட்ட மேம்பாலங்கள் விரைவில் கட்டப்பட உள்ளன.
விமான நிலையத்தில் உள்ள வசதிகள் போல், பேருந்து நிலையத்திலும்  தமிழகத்தில் முதன்முறையாக சேலத்தில் புதிய பேருந்து போர்ட் அமைக்கப்பட உள்ளது. மேலும், முதன்முறையாக ஏற்காடு சுற்றுலாப் பயணிகள் அனைத்து இடங்களுக்கும் செல்லும் வகையில் சிற்றுந்து தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை பேருந்து வசதி பெறாத ஏற்காட்டிலிருந்து குண்டூருக்கும், வாழப்பாடியிலிருந்து மல்லூருக்கும், ஆத்தூரிலிருந்து சேமூருக்கும் சிற்றுந்து சேவைகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. வீரகனூரில் இருந்து கோவைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து விடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது கட்சியின் சார்பில் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திப்பதாக கூறி பயணம் மேற்கொண்டுள்ளார். சேலம் மாவட்ட அனைத்து கிராமம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு நாங்கள் அனைவரும் சென்று வந்திருக்கிறோம். அதிமுக அரசு அதிகமான திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளது.
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, எந்த பகுதிகளுக்கு சென்றீர்கள்? நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை தேடிச் செல்கின்றனர். அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சென்று சேர வேண்டுமென உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக.
சேலம் மாவட்டத்தில் மட்டும் திருமண உதவி திட்டத்தின் கீழ் 44,975 ஏழை பெண்களுக்கு 205.50 கிலோ தங்கம், திருமண உதவித்தொகையாக ரூ.159 கோடியே 93 லட்சம், 1 லட்சத்து 78 ஆயிரம் பிளஸ் 2 வகுப்பு  மாணவ, மாணவியருக்கு ரூ.723.25 கோடியில் விலையில்லா மடிக்கணினி, கிராமப்புற பெண்களுக்கு 42 ஆயிரம் பேருக்கு விலையில்லா ஆடுகள், 73 ஆயிரத்து 896 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,874 கோடி நிதி ஒதுக்கீடு, பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.270 கோடியில் 16 ஆயிரம் வீடுகள், வறட்சி நிவாரணமாக 81 ஆயிரத்து 233 விவசாயிகளுக்கு ரூ.408.72 கோடி, 4 லட்சத்து 11 ஆயிரத்து 132 விவசாயிகளுக்கு ரூ.1,998 கோடி பயிர்க் கடன், 398 புதிய பேருந்துகள், புதிதாக 70 வழித்தடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மகுடஞ்சாவடி ஒன்றியம், வீரபாண்டி  ஒன்றியத்துக்குள்பட்ட பனமரத்துப்பட்டிக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு நிலையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். ஏழை எளிய மக்களுக்காக காப்பீட்டுத் திட்டத்தின் நிதியை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் முதன்முறையாக தமிழகத்தில் உள்ள சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரு கைகளையும் இழந்தவருக்கு மற்றவரின் இரு கைகளை எடுத்து  பொருத்தப்பட்டுள்ளது. கால்நடைகள் வளர்ப்பவர்கள் சிறப்படைய கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தலைவாசல், கூட்டு சாலை பகுதியில் இந்தியாவிலேயே இல்லாத வகையில் சிறப்பு கால்நடை நவீன ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
சேலம் முதல் செங்கப்பள்ளி வரை செல்லும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகமாகி உள்ளதால் விபத்து ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க இச்சாலை விரைவில் எட்டு வழி சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கு 103 கிலோ மீட்டருக்கு  ரூ.1,937 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது என்றார். 
விழாவில் முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வரவேற்றார். சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா, மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், காமராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மனோன்மணி, சித்ரா, செம்மலை, ராஜா, வெங்கடாஜலம், சக்திவேல், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் (பொ) வேடியப்பன், வட்டாட்சியர் சி.ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் எம்.ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சி.ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com