நுண் உயிரி உரம் தயாரிப்பு மையங்களில் பசுமை உரங்களை இலவசமாக வழங்க வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல கண்காணிப்புக் குழு தலைவர்

மாநகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண் உயிரி உரம் தயாரிப்பு மையங்களில் உற்பத்தி செய்யும்

மாநகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண் உயிரி உரம் தயாரிப்பு மையங்களில் உற்பத்தி செய்யும் பசுமை உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் தென்மண்டல கண்காணிப்புக் குழு தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி தெரிவித்தார்.
தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு திடக்கழிவு மேலாண்மை செயலாக்கத்தை கண்காணிக்கும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் தென்மண்டல கண்காணிப்புக் குழு தலைவரும், நீதிபதியுமான பி.ஜோதிமணி புதன்கிழமை சேலம் வந்தார். சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆய்வுமேற்கொண்டு திடக்கழிவு மேலாண்மை செயலாக்கத்தை சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார்.
அதனடிப்படையில், அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண்-9-இல் வாய்க்கால் பட்டறை பகுதியில் உள்ள காய்கறி கழிவுகளைக் கொண்டு எரிவாயு உற்பத்தி செய்யும் உயிரி எரிவாயு மையத்தினை பார்வையிட்டு, மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், இதன் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் பயன்பாடுகள் குறித்தும்  கேட்டறிந்தார்.  
அதைத் தொடர்ந்து, கோட்டம் எண்-10-இல் சரஸ்வதி நகர் குடியிருப்புப் பகுதிகளில் இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனத்தில் வீடுகள் தோறும் சென்று திடக்கழிவுகளை பெறும் போதே மக்கும் கழிவுகள்- மக்காத கழிவுகள் எனத் தரம் பிரித்து சேகரிக்கும் முறையினை ஆய்வு செய்து, திடக்கழிவுகளை தரம்  பிரிப்பது குறித்து அங்குள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடையே போதிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா எனக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கோட்டம் எண்-40-இல் அய்யாசாமி பசுமைவெளி பூங்காவில் சேகரமாகும் இலைகள், தழைகள் போன்ற மக்கும் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தள கலவை உரக்கிடங்கினை ஆய்வு செய்தார். பின்னர், சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்-18-இல் மெய்யனூர் பகுதியில் உள்ள நுண் உயிரி உரம் தயாரிப்பு மையத்தினை பார்வையிட்டார். முன்னதாக கோட்டம் எண்-14-இல் தொங்கும் பூங்கா வளாகத்தில் செயல்பட்டு வரும்  உலர் கழிவு சேகரிப்பு மையத்தின் பணிகளையும், கோட்டம் எண்-15-இல் வின்சர் கேசில் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கழிவுகளைக் கொண்டு எரிவாயுவினை உற்பத்தி செய்யும் உயிரி மீத்தேன் அலகினையும் அவர் பார்வையிட்டார்.
ஆய்வுக்குப்பின் நீதிபதி பி.ஜோதிமணி கூறியது: சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மையை கையாளுவது குறித்து  போதிய விழிப்புணர்வுகள், குறிப்பாக திடக்கழிவு மேலாண்மையில் திடக்கழிவுகளை மக்கும் கழிவுகள்-மக்காத கழிவுகள் என தரம் பிரிப்பது தொடர்பான விழிப்புணர்வு பணிகள் குழந்தைகளிடையே சென்றடையும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தால் விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது. 
இதுபோன்ற விழிப்புணர்வு பணிகள் அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். 
மேலும், மாநகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண் உயிரி உரம் தயாரிப்பு மையங்களில் உற்பத்தி செய்யும் பசுமை உரங்கள் மற்றும் பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள தள கலவை உரக்கிடங்கில் உற்பத்தி செய்யும் உரங்களை பூங்காக்களில் உள்ள செடி, கொடிகளுக்கு பயன்படுத்தி முறையாகப் பராமரிக்கவும் மற்றும்  மாநகராட்சி பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கும், மாடித்தோட்டம் அமைத்துள்ள பொதுமக்களுக்கும், இலவசமாக வழங்கப்பட வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தால் திடக்கழிவு மேலாண்மை செயலாக்கப் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு 
வருவது பாராட்டத்தக்கது என்றார்.
ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ், மாநகர நல அலுவலர் மருத்துவர் கே.பார்த்திபன், செயற்பொறியாளர் ஆர்.ரவி, உதவி செயற்பொறியாளர்கள் கே.செந்தில்குமார், எம்.கே.தமிழ்ச்செல்வன், சுகாதார அலுவலர்கள் எஸ்.மாணிக்கவாசகம், கே.ரவிச்சந்தர், சுகாதார ஆய்வாளர்கள் எ.சந்திரன், எ.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com