வங்காநரி ஜல்லிக்கட்டுக்கு வனத் துறை தடை

காணும் பொங்கல் தினத்தில் 200 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த வங்காநரி ஜல்லிக்கட்டுக்கு வனத் துறையினர் தடை விதித்தனர்.

காணும் பொங்கல் தினத்தில் 200 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த வங்காநரி ஜல்லிக்கட்டுக்கு வனத் துறையினர் தடை விதித்தனர். இதனால், கிராம மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
வாழப்பாடி அருகே  நரியாட்டம்,  வங்காநரி ஜல்லிக்கட்டு எனக் குறிப்பிடப்படும் விநோத விழா சின்னமநாயக்கன் பாளையம், ரங்கனூர், கொட்டாவடி, பெரியகிருஷ்ணாபுரம், மத்தூர், தமையனூர், வடுகத்தம்பட்டி, உள்ளிட்ட சில கிராமங்களில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்தது.
இதற்கிடையே,   வனவிலங்குப் பட்டியலில் வங்காநரி உள்ளதால்,  அந்த நரியைப் பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வனத் துறை தடை விதித்துள்ளது.  தடையை மீறி நடத்துவோருக்கு கடந்த சில ஆண்டுகளாக ரூ.30 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.  விழாவை நடத்திய கிராம மக்கள் மீது  வனத் துறையினர் வழக்கு பதிந்தால், அதற்கான அபராதத் தொகையும் கிராம மக்கள் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில்,   தடையை மீறி வங்காநரி பிடித்தால் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என வனத் துறையினர் அறிவித்தனர். 
இதையடுத்து,   ஜல்லிக்கட்டு நடத்தும் கிராமங்களுக்கு வியாழக்கிழமை சென்ற வனத் துறையினர் வங்காநரி பிடிக்கச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.  இதனால்,   விழாவைக் கொண்டாட முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையின்போது விளைநிலங்களைச் சுற்றியுள்ள  நிலங்கள், வனப் பகுதியில் புதரில் வாழும் வங்காநரியைப் பிடித்து, மேள வாத்தியத்தோடு ஊர்வலமாகக் கொண்டு சென்று கோயில் மைதானத்தில் கூடியிருக்கும் கிராம மக்களுக்குக் காட்டுவது, பாரம்பரியமாகத் தொடர்ந்து வருகிறது.  இதன்பிறகு  எந்தவிதத்திலும் நரியைத் துன்புறுத்தாமல் மீண்டும் பிடித்த இடத்திலேயே கொண்டு சென்று விட்டு விடுவோம். 
நரியைப் பிடித்துச் சென்று விரட்டுவது கூட இல்லை.  எனவே,  நரியாட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, விழா நடத்திட அனுமதியை வழங்குவதற்கு, மத்திய,  மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com