விவசாயிகளுக்கு வேளாண்மை அலுவலர் கோரிக்கை
By DIN | Published On : 28th January 2019 05:11 AM | Last Updated : 28th January 2019 05:11 AM | அ+அ அ- |

ஆத்தூர் வேளாண் அலுவலர் பொ. வேல்முருகன் விவசாயிகளுக்கு வேஸ்ட் டிகம்போசர் பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்தியுள்ளார்.
ஆத்தூர் வேளாண்மை அலுவலர் பொ. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அங்கக பண்ணையம் மையம் உருவாக்கிய வேஸ்ட் டிகம்போசர் கரைசலைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர்களின் கழிவுகளை நாம் எரிக்க வேண்டியதில்லை.
எளிதில் மக்க வைக்கலாம். சுற்றுச்சூழல் மாசில்லாமல் பாதுகாக்கலாம். தமிழக அரசின் வேளாண்மைத் துறை, வேஸ்ட் டிகம்போசரை பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் விலையில்லாமல் வழங்கி வருகிறது.
அதிகளவில் உற்பத்தி செய்தல்: டிரம் ஒன்றில் 200 லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ வெல்லம் கலந்து அதனுடன் ஒரு பாட்டில் கழிவு சிதைப்பான் இட வேண்டும். டிரமை மூடி வைக்க வேண்டும். தினமும் ஒருமுறை நன்றாக கலக்க வேண்டும். ஏழு நாள்களில் வேஸ்ட் டிகம்போசர் கரைசல் தயாராகி விடும்.
மக்க வைத்தல் (கம்போஸ்டிங்): மக்க வேண்டிய பொருள்களை (பயிர்களின் கழிவான வைக்கோல், மக்காசோள தட்டை, பருத்தி மெலார், தென்னை மட்டை போன்றவைகள்) ஒரு மெட்ரிக் டன் அளவுக்குப் பரப்பி விடவும். அதன்மேல் வேஸ்ட் டிகம்போசர் கரைசல் 60 சதவீத ஈரப்பத அளவுக்குத் தெளிக்க வேண்டும்.
மீண்டும் மக்க வேண்டிய பொருள்களை ஒரு மெட்ரிக் டன் அளவுக்குப் பரப்பி விடவும். மீண்டும் வேஸ்ட் டிகம்போசர் கரைசல் 60 சதவீத ஈரப்பத அளவுக்குத் தெளிக்க வேண்டும். இதேபோல் மக்க வேண்டிய பொருள்கள் உள்ளவரை செய்ய வேண்டும்.
பயிர்களின் மேல் தெளித்தல்:
அனைத்து பயிர்களிலும் வேஸ்ட் டிகம்போசர் 50 சதவீத கரைசலை ஏழு நாள்கள் இடைவெளியில் தெளிக்கலாம். காய்கறி பயிர்களில் 40 சதவீத கரைசலை மூன்று நாள்கள் இடைவெளியில் தெளிக்கலாம். பழப் பயிர்களில் 60 சதவீத கரைசலை ஏழு நாள்கள் இடைவெளியில் தெளிக்கலாம். இதனால் மகசூல் அதிகரிப்பதுடன் விலைப் பொருள்களின் தரமும் அதிகரிக்கின்றன.
விதைநேர்த்தி..விதையுடன் கலந்து 30 நிமிடங்கள் உலர வைத்து விதைக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஆத்தூர் வேளாண்மை அலுவலர் பொ. வேல்முருகனைத் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.