சங்க கால தமிழர்களின் வாழ்வியல் முறையை பின்பற்றாததே அடையாளங்களை இழக்கக் காரணம்: சொற்பொழிவாளர் ராம. செளந்தரவள்ளி
By DIN | Published On : 29th January 2019 04:42 AM | Last Updated : 29th January 2019 04:42 AM | அ+அ அ- |

தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்களை இழந்து வருவதற்கு சங்க கால தமிழர்களின் வாழ்வியல் முறையை பின்பற்றாததே காரணம் என சொற்பொழிவாளர் ராம. செளந்தரவள்ளி பேசினார்.
சேலம் தமிழ் சங்கத்தில் தமிழ் இலக்கிய விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சொற்பொழிவாளர் ராம.செளந்தரவள்ளி பங்கேற்றுப் பேசியதாவது: சங்க தமிழ் இலக்கியங்களின் முன்னோடி தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதர் ஆவார். பராமரிப்பின்றி இருந்த சங்க இலக்கியங்களின் ஏடுகளைத் தேடி சேகரித்து பாதுகாக்கப்பட்டதால்தான் சங்க கால வாழ்க்கை முறையை நம்மால் இன்று தெரிந்து கொள்ள முடிந்தது.
இன்றைய தமிழர்கள் தங்களது அடையாளங்களை சிறிது சிறிதாக இழந்து வருவதற்கு காரணம், சங்க கால தமிழர்களின் வாழ்வியல் முறையைப் பின்பற்றாததுமே காரணமாகும்.
சங்க தமிழர்களின் வாழ்வியல் தத்துவங்களையும், நெறிகளையும் எடுத்து கொடுத்தவர்கள் சங்ககால புலவர்கள்தான். அக் கால மன்னர்கள் வறுமையில் வாடிய புலவர்களுக்கு பரிசளித்துப் பாராட்டி கெளரவப்படுத்தியதால்தான் திறமையான பாடல்கள் இன்று நமக்குக் கிடைத்துள்ளன.
சங்க தமிழர்களின் வாழ்வியல் முறைகளை சரியாக நாம் செயல்படுத்தியிருந்தால் விவாகரத்து வழக்குகள் இருந்திருக்காது. வாழ்க்கையில் தீய செயல்களைத் தவிர்த்து நல்ல செயல்களை கற்றுக் கொண்டால், குறையில்லாமல் நிறைவுடன் வாழமுடியும் என்றார்.
விழாவில் சங்கத் தலைவர் சீனி. துரைசாமி, செயலாளர் வரத. ஜெயக்குமார், சூடாமணி, துணைச் செயலாளர் எஸ்.இ.சங்கரன், துணைத் தலைவர் கி. ராஜமோகன், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.