மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீர் திங்கள்கிழமை மாலை நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம்,

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீர் திங்கள்கிழமை மாலை நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16. 05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
ஆண்டுதோறும் டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-இல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 28-ஆம் தேதி நிறுத்தப்படும்.
 கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் குறித்த நாளில் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை.
ஜூலை 19-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
திங்கள்கிழமை மாலை பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
 கடந்த ஆண்டு காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு 370.64 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது.
திங்கள்கிழமை காலை வரை 193 நாள்களில் காவிரி டெல்டா பாசனத்துக்கு 211.81 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 9.56 டி.எம்.சி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
உபரி நீராக 119.08 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் மேட்டூர் அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின்சார உற்பத்தியும், சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட் மின்சார உற்பத்தியும், 5 கதவணைகளில் 150 மெகாவாட் மின்சார உற்பத்தியும் தடைபட்டுள்ளன.
திங்கள்கிழமை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.81 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 33.40 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com