வேலைவாய்ப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகளைகண்டித்து மறியலில் ஈடுபட்ட 43 பேர் கைது
By DIN | Published On : 29th January 2019 04:43 AM | Last Updated : 29th January 2019 04:43 AM | அ+அ அ- |

வேலைவாய்ப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியலில் ஈடுபட்டதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 43 பேரை போலீஸார் கைது செய்தனர்.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காத இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்துக்கு மாவட்டப் பொருளாளர் வி. வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாநகரத் தலைவர் பி. சதீஷ்குமார், மாநகரச் செயலாளர் ஆர்.வி. கதிர்வேல், மாநகரப் பொருளாளர் என். அம்ஜத்கான், மாநகர துணைத் தலைவர் எஸ். சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும், சேலம் உருக்காலையை விரிவுப்படுத்தி வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும், இயற்கை வளங்களை பயன்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதிய பேருந்து நிலையத்தின் பின் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 43 பேரை போலீஸார் கைது செய்தனர்.
எடப்பாடியில்...
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, திங்கள்கிழமை எடப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய, மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு முகாந்திரங்களை அரசு ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்கள்கிழமை எடப்பாடி பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்டச் செயலாளர் கணேசன் தலைமையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மறியலில் பங்கேற்றனர். இதையடுத்து அங்கு வந்த எடப்பாடி போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் அரங்கில் அடைத்தனர்.