விவசாயக் கண்காட்சியில் இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி
By DIN | Published On : 01st July 2019 09:48 AM | Last Updated : 01st July 2019 09:48 AM | அ+அ அ- |

அம்மம்பாளையத்தில் நடைபெறும் விவசாயக் கண்காட்சி மற்றும் வேளாண்மை கருத்தரங்கில் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளுக்கு பாசனம், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில் விவசாயக் கண்காட்சி மற்றும் வேளாண் கருத்தரங்கம் இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது.
அதில் இரண்டாம் நாளில் நடைபெற்ற பயிற்சி முகாமை வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ் நடத்தினார்.
நிகழ்ச்சியில் மானாவரி இறவை விவசாயத் தொழில் நுட்பங்கள்,அரசு மானியத்துடன் தொழில் வாய்ப்புகள், வறட்சி நீர் மேலாண்மை நிலத்தடி நீர் உயர வழிகள், செம்மண் நில-உப்பு நீர் மேலாண்மை இயற்கை வழி விவசாயம் செயல்படுத்தும் முறைகளும் வழிகளும் எடுத்துரைத்தார். மேலும் அவர் பேசியதாவது:
பூமியின் நிலத்தடி நீர்மட்டம் சுமார் ஆயிரம் அடிக்கு கீழே போய்விட்டது. இதனால் வாழை, தென்னை, பாக்கு, கால்நடைகள் பெருக்கமும் குறைந்து போனது.
தற்போது மானாவரி பயிர்களும் பயிரிட முடியாமல் போனதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில், ஆத்தூர் ராசி குழுமத்துடன் இணைந்து அக்சென் ஹை வெஜ் விவசாயக் கண்காட்சி இரண்டாம் ஆண்டாக நடைபெற்று வருகிறது.
இதற்கு தீர்வாக ஆத்தூர், சுற்றுவட்டாரப் பகுதியில் வயல்களில் சரிவான வரப்பு இருப்பதால் நீரைச் சேமிக்க முடியவில்லை. இதற்கு முறையான 3 அடிக்கு மேல் வரப்புகள் அமைத்து மழைத் துளியை வீணாக்காமல் சேர்த்து வைக்க வேண்டும்.
மூன்று ஏக்கருக்கு மேல் உள்ளவர்கள் பண்ணைக் குட்டைகள் அமைத்தல், தடுப்பணைகள் அமைத்து நீரை சேமிக்க வேண்டும். இதற்காக அரசு அதிக உதவிகளை செய்து வருகிறது எனப் பேசினார்.
நிகழ்ச்சியில் சேலம் மாவட்டம் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.