ஓமலூர் வட்டாரத்தில் இறுதிக்கட்ட மாம்பழ அறுவடை தீவிரம்

ஓமலூர் வட்டாரப் பகுதியில் இறுதிக்கட்ட மாம்பழ அறுவடை பணிகள் நடைபெறுகின்றன.

ஓமலூர் வட்டாரப் பகுதியில் இறுதிக்கட்ட மாம்பழ அறுவடை பணிகள் நடைபெறுகின்றன.
கடைகளில் கல் வைத்த மாம்பழங்களை விற்பனை செய்வதால் பொதுமக்கள் மாந்தோட்டங்களுக்கே சென்று மரத்தில் இருந்து பறித்தவுடன் வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ மாம்பழம் ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 தற்போது மாம்பழ சீசன் முடியும் கட்டத்துக்கு வந்துவிட்டது. இதைத் தொடர்ந்து இறுதி கட்டமாக அறுவடை செய்யப்படும் மாம்பழங்களை வியாபாரிகள் தோட்டங்களுக்குச் சென்று மொத்தமாக வாங்கி, உடனடி விற்பனைக்காக கெமிக்கல் கல் வைத்து பழுக்க வைத்து மொத்தமாக விற்பனை செய்கின்றனர்.
இதனால் உடல் நலத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதாக கூறும் பொதுமக்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும்  மாம்பழங்கள் வாங்குவதை தவிர்த்துள்ளனர். ஒமலூர் பகுதியில் உள்ள காமலாபுரம், நாரணம்பாளையம்,பூசாரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மாந்தோட்டங்களில் மாம்பழம் இறுதிகட்ட அறுவடை நடந்து வருகிறது.
அதனால்,பொதுமக்கள் நேரடியாக தோட்டங்களுக்கு சென்று மாம்பழங்களை மரத்தில் இருந்து பறிக்கும்போதே வாங்கிச் செல்கின்றனர். 
இந்த பகுதியில் மல்கோவா, குண்டு,நடுசாலை,பெங்களூரா,செந்தூரா, பங்கனப்பள்ளி,குதாதாத்உள்ளிட்ட பல்வேறு வகையிலான மாம்பழங்கள் விளைகின்றன.
இங்கே தோட்டத்தில் மாம்பழங்கள் தற்போது ஒரு கிலோ 30 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வாங்கிச் செல்லும் மாம்பழங்களை பொதுமக்கள் இயற்கை முறையில் பழுக்க வைத்து சாப்பிடுகின்றனர்.
இதனால் எந்த விதமான உடல் உபாதைகளும் வருவதில்லை. இதன் காரணமாக தற்போது ஓமலூர் பகுதியில் உள்ள மாந்தோட்டங்களில் மாங்காய் பறிக்கும் போதே அனைத்து மாம்பழங்களும் விற்பனையாகி வருகின்றன. மாம்பழங்கள் இறுதிகட்ட அறுவடையில் தற்போது கிலோ ரூ. 30-க்கு விற்பனை செய்யப்படுவதால் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதேவேளையில் தருமபுரி, கிருஷ்ணகிரி விவசாயிகள் மாம்பழம் விற்பனை குறைந்துள்ளதால் ஓமலூர் வட்டார பகுதிகளில் முகாமிட்டு விற்பனை செய்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தற்காலிகமாக கடைகள் அமைத்து இறுதிகட்ட விற்பனையை செய்து வருகின்றனர்.
இங்கு நல்ல தரமான மாம்பழங்கள் கிடைப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் வாங்கிச் செல்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com