மலையடிவாரத்தில் சாலைகள் சீரமைக்கப்படுமா?
By DIN | Published On : 08th July 2019 09:44 AM | Last Updated : 08th July 2019 09:44 AM | அ+அ அ- |

சங்ககிரி மலையடிவாரத்தில் பழுதடைந்துள்ள தார்சாலைகளை செப்பனிட வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நுழைவுவாயிலிருந்து மலைக்குச் செல்லும் தார் சாலை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காவிரி குடிநீர் குழாய் உடைந்தும், பிரதான குடிநீர் குழாயிலிருந்து வீடுகளுக்கு இணைப்புகள் வழங்குவதற்காகவும் இரு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டன.
நாளடைவில் அந்தப் பகுதியில் இரண்டு இடங்களிலும் தார் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டன. சேதம் அடைந்துள்ள சாலைகளின் வழியாக பவானி பிரதானச் சாலைக்கு செல்வதற்காக பள்ளி மாணவ, மாணவிகள், தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியார் நூற்பாலை வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் அந்தப் பகுதியில் ஜாமிய மஜீத்துக்கு தொழுகைக்கு செல்லும் இஸ்லாமியர்கள் வாகனங்களை நிறுத்த இயலாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
நிகழாண்டு ஆகஸ்ட் 3-இல் விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், மலையடிவாரத்தில் அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்த முக்கிய பிரமுகர்கள் வருகை தரவுள்ளனர்.
இந்த நிலையில் சேதம் அடைந்துள்ள தார் சாலைகளால், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுமக்கள் தரப்பில் கூறுகின்றனர்.
எனவே, சாலைகளை செப்பனிட்டும், கழிவு நீர் செல்ல வழியில்லாமல் அடைத்து குவித்து வைக்கப்பட்டுள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்ககிரி பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.