சேலத்தில் ஊதிய உயர்வு கோரி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்

சேலம் அரசு மருத்துவமனையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவர்கள் புதன்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவர்கள் புதன்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்,  அரசு மருத்துவர்கள் பணியிட  மாற்றம் செய்ததில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளைக் கண்டித்தும்,  14 ஆண்டுகள் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி ஊதிய உயர்வு அளித்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பினர் சார்பில்,  சேலம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 சென்னை,  திருச்சி,  திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட இடங்களில் மண்டல அளவில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டர். அரசு மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தினால்,  அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சிகிச்சையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கூறியது:  சேலம் அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில்,  300-க்கும் மேற்பட்ட பணியிடங்களை அரசு குறைத்துள்ளது.  நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில்,  பணியிடக் குறைப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே,  நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதாரத் துறை அமைச்சர், செயலர் ஆகியோரிடம் பல முறை மனு அளித்தும்,  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதன் காரணமாக அரசு மருத்துவர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட உள்ளனர்.
அடுத்தக்கட்டமாக,  சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும்,  தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் வெளி நோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணிக்கும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்.  மேலும்,  எந்தவித கலந்தாய்வும் செய்திடாமல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com