தபால் துறை சார்பில் கல்வி ஊக்கத்தொகை

இந்திய அஞ்சல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக

இந்திய அஞ்சல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சேலம் கிழக்குக் கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் ச.அ. முஜீப் பாஷா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அஞ்சல் துறை தபால் தலை சேகரிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தீன் தயாள ஸ்பார்ஷ் என்னும் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை தலைமை தபால் நிலையம் மற்றும் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.இந்தத் திட்டத்தின் முலம் பயனடைய மாணவர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிப்பவராய் இருக்க வேண்டும். பள்ளி இறுதித் தேர்வில் 60 சதவீதம் (எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 சதவீதம் தளர்ச்சி) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், மாணவர்கள் தங்கள் பெயரில் அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் அல்லது பள்ளியில் இயங்கும் தபால் தலை சேகரிப்பு மன்றத்தில் அங்கத்தினராக இருத்தல் வேண்டும்.  
மேற்காணும் தகுதியுடைய மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை முதன்மை அஞ்சலக அதிகாரி, சேலம் தலைமை தபால் அலுவலகம், சேலம்- 636001 என்ற முகவரிக்கு வரும் ஜூலை 24-ஆம் தேதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான தேர்வு முறைகள் ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள எழுத்துப்பூர்வ தபால் தலை சேகரிப்பு குறித்த வினாடி வினா தேர்வில் தேர்ச்சி பெறுதல், தபால் தலை சேகரிப்பு குறித்த திட்ட அறிக்கை தயாரித்தல் என இரண்டு கட்டமாக நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 93444-22883 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com